சாகரனுக்கு கவியஞ்சலிகள் - தம்பியடா நீ - மூர்த்தி

மாமனிதர் சாகரனுக்கு மறுபிறப்பு கொடு இறைவா! - ஷீநிசி

நான் உன்னை
அறிந்த நிமிடங்கள் -நீ
இறந்த நிமிடங்களாயிருந்தது..

சாதிக்க விரும்பினாய்
என்று அறிந்தேன் -உன்மேல்
எங்களின் அன்பு எத்துணையென்று
சோதிக்கவும் விரும்பினாயோ?!

எத்தனை கனவுகள்
புதைந்துக்கொண்டிருந்தது உன்னுள்!
அத்தனை கனவுகளும்
புதைந்திடுமோ இனி மண்னுள்?!

நேசிக்கும் நண்பர்களை கொடுத்தாய்
அவருக்கு! -நல்லது இறைவா?
சுவாசிக்கும் நாட்களை குறைத்தாயே?!
நல்லதா இறைவா?

சார்ந்த உறவுகளின்
விழிகளை கொஞ்சம்
துடைத்துவிடு....

சாகரனை இன்றைக்கே
வேறொரு உயிரில்
படைத்துவிடு....

- கண்ணீருடன் வேண்டுவது ஷீநிசி

மாமனிதர் சாகரனுக்கு இரங்கல்பா - வெங்கடரங்கன்

உனக்காக வாழ்த்துப்பா பாட
உள்ளம் நினைக்கையில்
இரங்கற்பாவிற்கு ஏன் துணை நின்றாய்?

அனைவரின் நலனுக்காய்
துடிதுடித்த உன் இதயம்
உனது நலன் மறந்ததேன்?

சாதிக்கத் துடித்த நீ
சாதித்து விட்டாய் என
முடித்துக் கொண்டதோ வாழ்வு?

உனது எண்ணத்தோடு
கலந்து கொள்ளாமல்
ஊமையாகிப் போன வார்த்தைகள்!

மரண செய்திக் கண்டதும்
நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாத
உனது இளம் வயது!

சாகரனே
முத்தமிழ்மன்றத்தின் தூணே
நீயா இறந்து போனாய்?

உனது கனவுகள்
உன்னைக் காணாது
கலங்கித் தவிக்கின்றன

முகம் அறியாத உறவுகளிடம்
இனம் புரியாத நட்பு
கொண்டாட வேண்டும் திரும்பிவா!

- கண்ணீருடன் வெங்கடரங்கன்

மாமனிதரின் புகழ் ஓங்குக - கிரியின் கவியஞ்சலி

மன்ற மாமனிதரின் புகழ் ஓங்குக.

எல்லை அற்றுப்பரந்து விரிந்த கடல்
இல்லை கள்ளம் வெள்ளை மனமதில்
முதிர்ந்த பேச்சில் வயது தெரியாது
உதிர்ந்த மலரின் வாசம் மறையாது

சாகரன் எங்கள் மன்றத் தூண்
சாக வயதில்லா எங்கள் தோழனை
வேகமாய் காலன் இடித்த தூண்
ஆகமம் அடுக்கா பழி இதுகாண்

ஆழியாய் பெயர் வைத்த மாமன்னனே
ஆழிப் பேரலையாய் காலன் அழைக்க
ஊழிப் புயலாய் இதயம் வெம்பியழ
யாழில் சோககீதம் இசைக்கச் செய்தாயே

அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?
நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்
மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே
நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே

மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்
தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்
இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்
என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.

அண்ணன் சாகரனுக்கு அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா

அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா... இலங்கை பெண்

சாதனையாளன் சாகரன் அண்ணாவே
சாதாரனமானவன் அல்ல நீங்கள்
சாதிக்க பிறந்த தமிழ்மகனல்லவா
சாதனைகளும் படைத்தீர்கள் அண்ணா

தமிழனாக பிறந்தீர் அண்ணாவே
தமிழுக்காக உழைத்தீரே அண்ணாவே
தமிழ் வாழ ஆசை கொண்டீரே அண்ணாவே
தமிழ்த்தாய் உம்மை என்றும் மறவாள்

கதிகலங்கி போனேன் நான் அண்ணாவே
காலையிலே வந்த முதல் நிமிடமே
காத்திருப்பில்லாமல் மன்றத்தினை திறப்பேன்
காலன் கொடிய செய்தியல்லவா கண்டேன் நான்

விதியினை வெல்ல முடியாத வாழ்விலே
விளையாட்டாகியதோ உள்ளங்கள் இன்று
விதி விளையாட்டிலே உம்மை இழந்திட்டோமே
விசர் பிடித்துவிட போகின்றது அண்ணாவே

மூன்று நாட்களுக்கு பின் மன்றத்தினை காண
மும்மரமாக வந்தேன் நான் இன்றைய தினம்
முத்தாய் பல முத்துக்கள் கொட்டிகிடக்குமே
முகம் மலரவில்லை முதல் பதிவினை கண்டு

அன்பு அண்ணாவே அழுகின்றேன் நான் இங்கே
அறிமுகம் இல்லாத உறவாகினும் அண்ணாவே
அன்புள்ளம் உங்கள் உள்ளம் என்றோ என் மனதில்
ஆணித்தரமாக பதிந்துவிட்டது அண்ணாவே

இழந்துவிட்டோமே உம்மை நாம் அண்ணாவே
இழக்க முடியாத இழப்பினை எண்ணி ஏங்குகின்றோம்
இழந்த உயிரை மீண்டும் பெற ஒரு வரம் கிடைத்தால்
இனிய அண்ணாவே உங்களின் உயிரை கேட்டெடுப்பேன்

துக்கங்கள் என் வாழ்வில் புதிதில்லை அண்ணாவே
துவண்டே பழகியும் போனது அண்ணாவே
துவழுகின்றேன் நானிங்கு உங்களின் இழப்பாலே
துக்கத்தை ஆற்ற முடியாமல் தவிக்கின்றேன் தனிமையிலே

இந்தியாவில் இருந்திருந்தால் நேரடியாக வந்திருப்பேன்
இருக்கும் இடமோ கடல் தாண்டிய இடமாச்சே அண்ணா
இங்கிருந்தே தேம்பி அழுகின்றேன் என் அண்ணாவே
இறுதி நிகழ்வில் கூட கலந்து கண்ணீர் விடமுடியாமலே

எங்கிருந்தோ வந்தோம் நாம் எல்லோரும் அண்ணாவே
எதிர்பார்புகள் இல்லாமல் சந்தித்தோம் அண்ணாவே
ஏனோ இறைவனுக்கும் பொறுக்கவில்லை அண்ணாவே
எங்களின் இன்ப உறவு பிணைப்பினை அண்ணாவே

தங்களின் ஆத்மா சாந்தியடையவே வேண்டி அண்ணாவே
தாமதமாக என்றாலும் தரணி முழுவதும் நாம் சொல்வோம்
தந்தீரே உன்னத சேவை எம் மன்றத்துக்கு நீவீர் என்றுமே
தரணி முழுவதும் வாழும் உங்களின் உயிர் எம் மனதிலே

விக்கித்து போய் நிக்கின்றேன் நானிங்கே அண்ணாவே
விசனமாக இருக்கின்றது கடவுளின் மேல் அண்ணாவே
விடியற்காலையிலே விழி பிதுங்கி போனேன் அண்ணாவே
விடியதா இரவுகளில் எத்தனை கனவுகளின் கோலங்கள்

வேண்டுகின்றேன் இறைவனின் திருப்பாதத்திலே அண்ணாவே
வேதனையில் நிக்கும் உங்கள் குடும்பத்தினருக்காவே அண்ணாவே
வேற்று பிறப்பில் அதே கல்யானாக பிறந்திடுங்கள் அண்ணாவே
வேதனைகள் தாங்காத என் உள்ளம் என்றுமே வேதனையிலே....

அண்ணாவே ஆணிவேராக இருந்த அண்ணாவே உங்களின் ஆத்மா சாந்தியடைய
சிறியவள் உங்கள் தங்கை இறைவனிடம் மன்றாடுகின்றேன் உங்களின்
குடும்பத்தினரையும் ஆறுதல் படுத்தனும் இறைவன் இரக்கமில்ல்லாமல் செய்த
செயலினால் பரிதவிக்கின்றோம் இங்கு நாம் எல்லோருமே....

சாகரன் அண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

சாகாவரம் பெற்ற சாகரனுக்கு காவியனின் கவியஞ்சலிகள்

எங்கள் பிரம்மா சாகரன் அவர்களின் உடல் வேண்டும் என்றால் எங்களை விட்டு போயிருக்கலாம், அவர் மூச்சு, அவர் உயிர், அவர் திறமைகள் அனைத்தும் என்றும் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.

முத்தமிழ் மன்றம், தேன்கூடு, பாலகுமாரன், துவக்கு, இன்னும் பல்வேறு தளங்களை படைத்த பிரம்மாவுக்கு எங்கள் கவியஞ்சலிகள்.

----------

காவியனின் கவியஞ்சலி

சாகரனே...
இணைய உலகின்
இணையில்லா சாதனையாளனே
எங்கே சென்றாய் எமை விட்டு..

பட்டு பூச்சியாய்
உனை வட்டமிட்ட
சின்ன சிட்டு மகளை விட்டு
எட்ட ஏன் சென்றாய்....

விம்மி விம்மி
அழுது துடிக்கும் உன்
அன்பு மனையாள் விட்டு
எட்ட ஏன் சென்றிட்டாய்

இனிய நண்பன் உனக்கு
இதய நோய் தந்திட்ட அந்த
இறைவனுக்கு இரக்கமில்லையோ

நண்பா...
தமிழ் மணக்கும் இணையங்கள் மேல்
இடி விழுந்து போயிற்று
முத்தமிழ் மன்றம் இன்று
முகாரியே பாடுது...

தமிழ்த் தாய் முக்குளித்து
எடுத்த எங்கள்
முத்து சிப்பியே...
உனை நான் பார்த்தறியேன்
இரு தினம் முன்
இணயத்தில் படித்தேன்
தமிழ் வளர்க்க நீ
தாயாய் உழைத்ததும்
முத்தமிழ் மன்றுக்கு நீ
தகப்பன் ஆனதும்...

நேற்றைய பொழுது நீ
மடிந்திட்ட செய்தி கேட்டு
என் தலை
மேல் இடி விழுந்து போயிற்று
மூச்சு முட்டிப் போனது
இதயத்து இரத்தம்
கண் வழியே கண்ணிராய் ஓடிற்று

கதி கலங்கி நிற்குதய்யா இணையம்
இதய வலி உனை
இறைவனடி சேர்த்தது கேட்டு
இதயங்களில் இரத்தக் கண்ணீர் வடிகிறது

இறைவா
இனி ஒரு கல்யாணை எமக்கு
கனவிலேனும் தருவாயா?...

சாகரன் என்ற சாதனையாளனே
நீ.....
சாகா வரம் பெற்றுவிட்டாய்
இணையங்கள் மூலம்
எம்
இதயங்கள் வென்றுவிட்டாய்
மண் விட்டு போகலாம்
உன் உடல்....
எம் மனம் விட்டு போகாது
உம் உயிர்....
எம் நினைவில் என்றும்
நீர் வாழ்வீர்.....

கண்ணீர் அஞ்சலி!



ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளரும், தேன்கூடு திரட்டியை தோற்றுவித்தவரும், முத்தமிழ்மன்றத்தின் நிர்வாகியுமான திரு. கல்யாண்(சாகரன்) அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அவரது உடல் ஒபய்த் ஹாஸ்பிடலில் தற்சமயம் உள்ளது என்பதனை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

முத்தமிழ்மன்றம் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தூணை இழந்து தவிக்கிறோம். 1978ல் பிறந்தவர். 28 வயது முடிந்து இன்னும் 29கூட ஆகாதவர். இந்த வயது இறக்கும் வயதா???

இதுபோன்ற கொடுஞ்செயல்களைப் பார்க்கும்போது இறைவன் இருக்கின்றானா என்று கேட்கத் தோன்றுகிறது. மனைவி, மூன்று வயது குட்டிப் பாப்பா வர்ணிகா, அப்பா, அம்மா, தங்கை ஆகியோரைப் பிரித்து அவரை அழைத்துச் சென்ற காலனை நினைத்தால்... கோபமாக வருகிறது.

கல்யாணின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கல்யாணின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைத் தொழுவோம்.

பிரிவால் வாடும்,
முத்தமிழ்மன்ற நண்பர்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:-

1.ரியாத் தமிழ்ச்சங்கம்
2.சந்திரமதி கந்தசாமி
3.துளசிகோபால்
4.நாமக்கல் சிபி
5.தமிழ்மணம்
6.சிந்தாநதி
7.முத்தமிழ்மன்றம்

என்னை ஜெயிக்க வையுங்கள்!- சக்தி பரஞ்சோதி

இது ஒரு மீள்பதிவு:- சக்தி அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் சக்திக்கே 47ம் எண்ணில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.




சக்தி சொல்கிறார்:-

தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணா, அக்கா, அண்ணி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்றும் அனைவரும் வாங்க, வாங்க. எனக்கு ஓட்டு போடுங்க. ஜெயிக்க வையுங்கள். நீங்க ஓட்டு போட்டால் மட்டும் போதாது, எல்லோரையும் ஓட்டு போட வையுங்க. உங்களை நம்பி தான் களத்தில் இறங்கி இருக்கேன்.

http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec4b_main.shtml

47-ம் எண் என்னுடையது. மறந்து விடாதீங்க, மறந்தும் இருந்து விடாதீங்க. என் அப்பா யார்னு தெரியும் இல்லே? சிறுவர் பூங்கா புகழ் பரஞ்சோதிதான்!

அன்புடன்
சக்தி.

சிநேகிதாவுக்கு வாக்களியுங்கள்!

நண்பர்களே!




http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec2b_main.shtml

என்னுடைய நண்பர் முரளிமோகனின் அருமை புதல்வி ஒரு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார், அவருக்கு உங்கள் பொன்னான வாக்கை செலுத்து வெற்றி பெற செய்யுங்கள்.உங்களை நம்பி அவரிடம் சவால் விட்டிருக்கிறேன், கவுத்திப்புடாதீங்க

போடுங்கய்யா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்கம்மா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்கண்ணா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்க அக்கா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து

அன்புடன்,
பரஞ்சோதி.

ஏன் இந்த பெயர் வந்தது? - மன்னையார்

எதற்காக கூப்பிடுகிறோம் என்று தெரியாமலே நாம் பெயர்களை அழைக்கிறோம். அதிலும் பெயர்களை மொட்டை போட்டு கொச்சையாவும் அழைக்கிறோம். ஏன் இந்த பெயர் வந்தது?

1. சென்னை - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்: மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.

மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:- ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:- ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு: மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்: இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்: பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை : சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை : பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்: புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை: ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு : செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர் : பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்: பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பூந்தமல்லி : பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்: நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்: ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்: முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

கோவூர்: கோ- காமதேனு பூசித்த சிவாலயம் இன்று கோவூர்.

குன்றத்தூர்: குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்: அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்: பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:- மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி : திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்: மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

திண்டிவனம் : திந்த்ரினி வனம் ( புளியங்காடு) இன்று திண்டிவனம்.

வடபழநி: பழய பெயர் புலியூர்கோட்டம்.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்: முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் : ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம் : கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

மேலும் படிக்க:- http://muthamilmantram.com/showthread.php?p=148709#post148709

காவியக் காதல்!

அமரக் காதல் என்றால் நமது நினைவில் உடனே வருபவர்கள் அம்பிகாபதி-அமராவதிதான்.

அம்பிகாபதி கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மகன். அமராவதி குலோத்துங்க சோழ மன்னனின் மகள். கம்பர் குலோத்துங்கனின் அவைக்களப் புலவராக ஒட்டக்கூத்தருடன் சமமாக இருந்தார். அமராவதி அம்பிகாபதியின் புலமை மற்றும் இலக்கிய அறிவை வியந்து அவன் மேல் காதல் கொண்டாள். அம்பிகாபதியின் அறிவுத்திறனை எடுத்துக் காட்டும் சம்பவம் ஒன்றுண்டு.

ஒரு முறை கம்பர் ஒரு நெல்வயலுக்குச் சென்றிருந்தார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஏற்றம் என்ற சாதனத்தைத்தான் முன்பு பயன்படுத்தினர் ஏனென்றால் "பம்ப்" (pump) கண்டுபிடிக்கப் படவில்லை. அங்கே ஏற்றம் இறைப்பவன், "மூங்கிலிலை மேலே" என்ற இரண்டு வார்தைகளை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டே ஏற்றமிறைத்தான். கம்பருக்கு அதன் பிறகு என்ன வார்த்தைகள் பாடலில் வரும் என்று தெரியவில்லை. தந்தை ஏதோ சிந்தனையிலிருப்பதைக் கண்ட அம்பிகாபதி அவரிடம் விஷயத்தைக் கூறுமாறு கேட்டான்.

அவர் விஷயத்தைக் கூறியதும் அம்பிகாபதி,
"மூங்கிலிலை மேலே, தூங்கு பனி நீரே, தூங்கு பனி நீரை வாங்கும் கதிரோனே" என்ற வார்த்தைகளைக் கூறவும் கம்பர் அகமிக மகிழ்ந்து, "ஏற்றக் காரன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை, என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை" என்று கூறிப் புளகாங்கிதமடந்தார்.

அம்பிகாபதி ஒரு நாள் கம்பருடன் குலோத்துங்கனின் அவைக்குச் சென்றிருந்தான். அப்பொழுது அமராவதி அவனுக்கும் கம்பருக்கும் ஒரு தட்டில் நீர் கொணர்ந்து கொடுத்தாள். அவளது நடையழகை மிகவும் ரசித்த அம்பிகாபதி தன்னை மறந்து, "இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்கவட்டில் சுமந்து மருங்கசைய" என்று பாட ஆரம்பித்து விட்டான். அப்பொழுது ஒட்டக்கூத்தரும் அவையிலிருந்தார். ஒட்டக்கூத்தரின் குதர்க்க புத்தியைப் பற்றி நன்கறிந்த கம்பர் உடனே குருக்கிட்டு,'கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்' என்று பாடலை முடித்தார்.

இந்தச் சமாளிப்பை ஒட்டக்கூத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்பர் கலைமகளிடம் முறையிட்டார். சரஸ்வதி தேவி ஒரு மூதாட்டியாகத் தோன்றி, ஒரு கூடையில் கொட்டிக் கிழங்குகளை எடுத்துக் கொண்டு அரண்மனை வாயிலில் வந்து கூவினாள். அதனால் அம்பிகாபதி அன்று தப்பினான்.

அம்பிகாபதி - அமராவதி காதலுக்கு ஒட்டக்கூத்தர் வாயிலாகக் கடும் எதிர்ப்பு உருவானது. அதன்படி மன்னன் குலோத்துங்கன் அவர்கள் காதலுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். அம்பிகாபதி காதல் ரசம் இல்லாமல் தொடர்ந்து நூறு பாடல்கள் பாட வேண்டும். பாடி முடித்தால் அமராவதியை அடையலாம். தவறினால் மரண தண்டனையை ஏற்க வேண்டும். இதனையேற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான்.

அமராவதி ஒரு தட்டில் நூறு மலர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலராக எடுத்து வேறு ஒரு தட்டிலிட்டாள். இவ்வாறு பாடும் பொழுது முதல் பாடலான இறைவணக்கப் பாடல் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனை உணராத அமராவதி, அம்பிகாபதி இறைவணக்கப் பாடலுடன் சேர்த்து நூறு பாடல்களைப் பாடி முடித்ததும் பரவசத்தில் தன்னை மறந்து அம்பிகாபதியை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட பரவசத்தில் அம்பிகாபதி தன்னை மறந்து,

'சற்றே பருத்த தனமே துவளத் தரளவடம்
துற்றேயசையக் குழையூசலாட, துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேறிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே'

எனும் காதல் ரசம் ததும்பும் ஒரு பாடலைப் பாடி விட்டான். ஒட்டக்கூத்தர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்து அவன் மரண தண்டனை அடையும்படிச் செய்துவிட்டார்.

இந்தக் கதை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அம்பிகாபதியாகவும், பிரபல பாடகியும் நடிகையுமான பானுமதி அவர்கள் அமராவதியாகவும், எம். என். நம்பியார் அவர்கள் ஒட்டக்கூத்தராகவும், பழம்பெரும் நடிகர் எம். கே. ராதா கம்பராகவும் நடித்த "அம்பிகாபதி" திரைப் படத்தில் தத்ரூபமாகப் படமாக்கப் பட்டுள்ளது.

காதலியை அடைய வேண்டிய அம்பிகாபதி உணார்ச்சி மிகுதியால் காலனை அடைய நேர்ந்த இக்கதை இன்றைய காதலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். காதலில் வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்!

முத்தமிழ்மன்றத்திற்கு வாழ்த்துக்கள்!

உன்னை வாழ்த்துவதற்கு
பேதை என்னிடம்
வார்த்தைகள் ஏதும் இல்லை
உன்னில் நான் பல கவிஞர்களை
காண்கின்றேன்....பூரிப்பாகவுள்ளது....

முத்தமிழ் மன்றமே
என் வேலை
மணித்தியாலங்களில் பல
உன்னோடு முடிகின்றது...

நான் உன்னில்...இரசித்து
பார்ப்பது..இந்த கவி பக்கம்
மட்டுமே...
ஏனோ தெரியவில்லை....
என் நாட்கள் கூட முழுமை
அடைவதில்லை உன்னை நான்
ஒரு நாளாவது பார்க்காது போனால்..
இது உன்னில்...கவி......தவழ விடும்
பல உறவுகளுக்கு தெரியும்....

உன்னை ஆராதிக்க....
பலர் இருக்கின்ற போதிலும்
இதிலே இந்த பேதைக்கும்
ஒரு ஆசை வந்திட்டது...
உன்னை வாழ்த்துவதற்கு

முத்தமிழ்மன்றமே... நீ வாழி
உன் உன்னத கலைச்சேவை வாழி
உன்னில் கவி படைக்கும்
அனைத்து கவிஞர்களும் வாழி
என்றென்றும் உன் சேவை வாழியவே

முத்தமிழ் மன்றத்தினை...வாழ்த்த வயதோ...அனுபவமோ கானாது எனக்கு இருந்தும் ஒரு சிறிய ஆசை...தவறெனின் மன்னித்துவிடுங்கள் உறவுகளே...

நன்றிகளுடன்
இலங்கை பெண்...

இந்தியா முன்னேற யோசனைகள்!

பணம் எங்கும் புழுங்குகிறது. கறுப்பு வெள்ளை என்று நிறம் மாறுகிறது. இதை கட்டுப்படுத்த ஒரு யோசனை.

அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் உங்கள் சம்பளம் 20000 என்று வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு பணமாக கிட்டாது. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் பணமே அச்சடிக்காது.

உங்களிடம் உள்ள அட்டையில் 20000 புள்ளிகள் கூடிவிடும். இந்த அட்டையை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றால் நீங்கள் செலவு செய்யலாம். உங்கள் அட்டையிலிருந்து நீங்கள் செலவு செய்த அளவிற்கு புள்ளிகள் குறைக்கப்பட்டுவிடும். பிறகு முடி திருத்தும் நிலையம் சினிமா எலெக்ட்ரானிக்ஸ் இப்படி எங்குமே பணம் இல்லை.

உங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் வங்கியின் மூலமாக மட்டுமே உங்கள் அட்டையிலிருக்கும் புள்ளிகளை அதிகரிக்க முடியும்.

இப்படியானால் ஒவ்வொரு குடிமகனின் செலவை அரசாங்கம் கண்கானிக்க இயலும். வரவையும் தான். இது கறுப்பு பணத்தையும் லஞ்சத்தையும் வெகுவாக குறைக்கும்.இதில் சங்கடம் என்னவென்றால் பாமர மக்களும் உபயோகிக்கும் அளவிற்கு இதை எளிமையாக்குவது தான்.

மேலும் நிறைய:-http://www.muthamilmantram.com/showthread.php?p=132302#post132302

ஆலோசகர்:- மோகன்.

புதிய தலைமை நடத்துனர் கிரி!

அன்புள்ள முத்தமிழ் மன்ற நண்பர்களே,

நமது மன்றத்தில் அருமையான பல பதிவுகளைத் தந்து கொண்டிருப்பவரும் மற்றவர்களுக்கு தம்மாலான உதவியைச் செய்து வருபவருமான ரத்தினகிரி அவர்கள் இன்றுமுதல் தலைமை நடத்துனர் ஆகிறார். இக்பால் மற்றும் ரத்தினகிரி ஆகியோர் தலைமை நடத்துனர்களாக இருந்து நமது மன்றத்தையும் உறுப்பினர்களையும் வழிநடத்துவார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். பதவி உயர்வு பெற்ற ரத்தினகிரி அவர்களை பாராட்டுவதில் பெருமை அடைகிறேன். இந்திய சுதந்திர நாள் வாழ்த்துக்களை நம் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
முத்தமிழ்.

===================================================================

அன்புத் தம்பி ரத்தினகிரி அவர்கள் முத்தமிழ் மன்றம் புதிய பொலிவைப் பெற்றுள்ள சுதந்திர தின இந்நன்னாளிலிருந்து தலைமை நடத்துனராக பதிவு உயர்வு பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.ரத்தினகிரி குறுகிய காலத்தில் நல்ல பதிவுகள் பல தந்து மன்ற உறுப்பினர்கள், நடத்துனர்கள் மற்றும் நிர்வாக நண்பர்கள் மனதில் இடம் நல்லதொரு இடம் பெற்றுள்ளார் என்பதை நினைவுக்கு கொண்டு வந்து அவரை நன்றியுடன் பாராட்டுகின்றோம்.எல்லோரும் தொடர்ந்து இதே மாதிரியான அன்புடனும், நட்புடனும் கூடிய ஆதரவினை அவருக்கு அளித்து, அவர் தன் பணியில் முன்னரை விட அதிக உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் உலா வர மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
இக்பால்.

அழகிய பெண்ணின் இலக்கணம் - மணி

வெண்மையாக இருக்க வேண்டியவை: பற்கள், சருமம், கைகள்.

கறுப்பாக இருக்க வேண்டியவை: கண்கள், புருவம், கண் இமைகள்.

சிவப்பாக இருக்க வேண்டியவை: உதடுகள், கண்ணங்கள், நகங்கள்.

நீளமாக இருக்க வேண்டியவை: கைகள், உடல், தலைமுடி.

குட்டையாக இருக்க வேண்டியவை: கால்கள், காதுகள், பற்கள்.

உருண்டையாக இருக்க வேண்டியவை: உதடுகள், புஜங்கள், காலின் பின்புறமுள்ள தசைகள்.

சிறிதாக இருக்க வேண்டியவை: இடை, கைகள், பாதங்கள்.

மென்மையாக இருக்க வேண்டியவை: உதடுகள், விரல்கள், கைகள்.

இவை எல்லாம் ஷேக்ஸ்பியரின் விளக்கங்கள் இவ்வாறு இருந்தால் ஷேக்ஸ்பியருக்கு பிடிக்கும். அனைவருக்கும் கட்டாயாமல்ல...

சிவாலயங்களில் செய்யத்தகாதன! - சிவசேவகன்

1. குளிக்காமல் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது!

2. மேல் வேட்டி, சட்டை முதலிய அணிந்து செல்லக் கூடாது!

3. சிரித்தல், சண்டையிடல், வீண் வார்த்தைகள் பேசல், உறங்கல் கூடாது!

4. சிவனார்க்கும், நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லுதல் கூடாது!

5. பலிபீடத்திற்கும், சன்னிதிக்கும் இடையே போதல் கூடாது!

6. அபிஷேகம் நடக்கும் போது உட் பிரகாரத்தில் வலம் வரல் கூடாது!

7. வழிபாட்டை அவசரமாக நிகழ்த்தல் கூடாது!

8. சுவாமிக்கு நேராக காலை நீட்டி வணங்கல் கூடாது!

9. ஈரமான ஆடை அணிந்து செல்லுதல் கூடாது, மயிர் கோதி முடித்தல் கூடாது!

10. பாதரட்சை, குடை முதலியன எடுத்துச் செல்ல கூடாது!

காஞ்சி மஹா பெரியவர் - நடமாடும் தெய்வம்

1893ம் ஆண்டிலே அவதரித்து 1994ம் ஆண்டிலே முக்தியடைந்த காஞ்சி மஹா பெரியவர் உலகத் தலைவர்களும், பிற மதத் தலைவர்களும் மதித்த ஒரு உத்தமமான ஜீவன்.

ஒரு முறை காஞ்சி மடத்தில், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவர்கள் மஹா பெரியவரை தரிசித்த பொழுது, மஹா பெரியவர் நீங்கள் ஐந்து முறை தொழுகை செய்கிறீர்களா? என வினவினாராம்.

இஸ்மாயில் அவர்கள் தான் நான்கு முறை மட்டுமே தொழுவதாகக் கூறினார்.

ஐந்து முறை தொழுவது உண்டல்லவா? என மஹா பெரியவர் கேட்டாராம்.

இஸ்மாயில் அவர்கள், ஆமாம் உண்டு. அர்த்தசாமம் எனும் நடுநிசியில் ஒரு முறைத் தொழவேண்டும். சிலர் மட்டுமே இதைச் செய்கிறார்கள்.

இதைக் கேட்ட மஹா பெரியவர்கள், உற்க்கத்தில் கூட இறை உணர்வு வரவேண்டும் என மனிதனை பண் படுத்திய வழிபாடுகள் உண்மையாய் கடைபிடிக்கப்பட்டால், சண்டை சச்சரவுகளே வாராது அல்லவா எனக் கேட்டு, நீங்களாவது ஐந்து முறை தொழுகை செய்யுங்கள் என்று கூறினாராம்.

*-*-*-*-*-*-*

ஒரு முறை தொழிலதிபர் பிர்லா அவர்கள், மஹாபெரியவர்களை தரிசிக்க வந்தார். வரும் பொழுது பல தட்டுக்களில் பழங்களை வைத்து கொண்டு வந்தார். அதில் ஒரு தட்டில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளும் வைத்திருந்தார்.

தரிசனம் முடிந்து, பிர்லா கிளம்பு பொழுது, பெரியவர் தட்டில் என்ன வைத்திருக்கிறாய் எனக் கேட்டாராம். பிர்லாவும் காணிக்கை வைத்திருப்பதாகவும், இன்னும் பெரியவர் உத்தரவு பண்ணினால் காசோலையே தருவதாகக் கூறினார்.

இதைக் கேட்ட பெரியவர், ஒன்றும் இல்லாத எனக்கே நீங்கள் இவ்வளவு பணம் தருகிறீர்கள் என்றால், குடும்பத்தொடு அன்றாடம் போராடி வாழ்க்கை நடத்தும் மனுஷனுக்கு எவ்வளவு தேவைப்படும். ஆகவே இந்த பணத்தை நீங்களே எடுத்துக்கொண்டு கஷ்ட ஜீவனம் பண்ணும் எளியவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்றாராம்.

வெளியே வந்த பிர்லா, தன்னுடன் வந்த நண்பரிடம் கூறினாராம் :- நான் பார்க்கும் பல ஆன்மீகவாதிகள் பணத்தை எப்படியெல்லாம் இரட்டிப்பாக்கலாம் என பல வழிகளில் பணம் சேர்க்கும் வேளையில், எதுவுமே தனக்கு வேண்டாம் என்று கூறும் மஹாபெரியவர் உண்மையிலேயே நடமாடும் தெய்வம் தான் என்றாராம்.

படித்ததில் பிடித்தது - ரத்தினகிரி

பிள்ளையார் சுழியைப் பற்றி ஒவ்வொருவரிடமும் கேட்ட போது:

நர்சரிக் குழந்தை: அம்மா போடச் சொன்னாங்க, போடலைன்னா சாமி அடிக்கும். போட்டா சாமி காப்பாத்தும்.

பள்ளி மாணவன்: சாமி கும்பிட்டு ஆரம்பித்தால் நல்லது. அதான்.

சாதாரண மக்கள்: ரொம்ப வருடம் பழகி விட்டது.

நாத்திகர்: அந்தக் காலத்தில் எழுத்தாணி அல்லது தொட்டு எழுதும் பேனா சரியாக எழுதுகின்றதா என்று சோதிப்பதற்காக ஒரு சிறு கீற்று. அதை இந்த மடமக்கள் பிள்ளையார், அது இது என்று காதில் பூச்சுற்ற ஆரம்பித்து விட்டனர்.

ஆன்மீகத்தினர்: கணபதி அனைத்திற்கும் ஆரம்பம். விக்னம் தீர்க்கும் விநாயகர் தான் ஆரம்பிக்கும் இச்செயல் விக்னமின்றி முழுமை பெற வழிபடும் முகமாகவே இக்குறியீடு. ஓம் என்ற பிரணவமே விநாயகர். அதன் திரிபு தான் உ என்ற எழுத்து.

அறிவியல் ஆன்மீகம்: உ என்ற வார்த்தை பூஜ்ஜியமும், நேர்கோடும் சேர்ந்த அமைப்பு. பூஜ்யம் என்பது ஆதியும் அந்தமும் இல்லாத பாரதம் கண்டுபிடித்த உயரிய அமைப்பு. அண்டமும் வட்டம் தானே! அது சுழலும் பாதையும் வட்டம் தானே. ஆதலின் சர்வ வியாபகம் உடைய சர்வ வல்லமையுடைய ஆதி அந்தமில்லா இறைவனை ஒரு சிறு வட்டத்தினைக் குறிப்பதன் மூலம் உணர்ந்து வழிபடுகிறோம்.

மின் உற்பத்தி செய்யும் டைனமோ அமைப்பில், காந்தத்தின் சுழற்சியில் மின்சக்தி வெளிப்படும். அணுவின் சுழற்சியில் சக்தியின் வெளிப்பாடும் இது போல் தான். சக்தியின் வெளிப்பாடு, நேர் கோட்டிலே தான் இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேல் உள்ள பரம்பொருளை பூஜ்யமாகவும், அதிலிருந்து வெளிப்படும் சக்தியை நேர்கோடாகவும் எழுதுவதே உ ஆகும். இந்த உலகத் தத்துவத்தை ஒரு எழுத்தில் உணர்த்துவது ஆன்மீகம்.

நன்றாகப் பாருங்கள், ஆயிரம்,லட்சம், கோடி தவிர அனைத்து தமிழ் எண்களும் உ வில் தான் முடிவுறும்!

------------------------------------------------------------------------------------
இவ்வாறு பல விஷயங்களைப் பற்றி சிவகாசியிலிருக்கும் மற்றொரு மருத்துவர் (எஸ். எஸ். பி போல்) பாலசுப்பிரமணியன் அவர்கள் குருகுலத்தில் ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அதிலிருந்து படித்ததில் பிடித்தது உங்களுக்காக.

மேலும் படிக்க தருகை தாங்க: http://www.muthamilmantram.com

இந்து என்று ஒரு மதமே கிடையாது! - சிவசேவகன்

1. உள்ளங்கவர் கள்வன் (By கி.வா.ஜகன்னாதன்)

"இந்துமதம் என்ற இக்காலத்தில் வழங்கும் பெயர் பலசமயங்களுக்கும் பொதுவானது. அப்படி ஒரு தனிச் சமயம் இல்லை. ஆனாலும் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் பலவற்றிற்குப் பொதுவாக அந்தப் பெயர் அயல் நாட்டவரால் வழங்கப் பெற்று நாளடைவில் நாமும் வழங்கும்படியாயிற்று"

2. காங்கிரஸ் 15-7-1956 (ஜுன் வெளிவந்த பிலிம் இண்டியாத் தமிழாக்கம்) "ஆங்கிலச் சரித்திரப் பேராசிரியர்கள் தான் முகலாயர்கள் இந்தியருக்கு கொடுத்து வந்த 'இந்து' என்ற பெயரை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் அழுத்தமாக வற்புறுத்தி ........ பிரிவினையை ஏற்படுத்துவதற்குக் காரண கர்த்தர்க்களாக இருந்தார்கள். முகலாயர்கள் இந்தியாவைப் படையெடுப்பதற்கு முன்பு ஹிந்துக்கள் என்ற பெயரே கிடையாது"

3. பிரம வித்தியா பத்திரிகை (புத்தகம் 4, இலக்கம் 14, பக்கம் 201, 202.) பக்கம் -201 "ஹிந்து என்னுஞ் சொல் புதியதே. இதைச் சிலபாஷாகவிகள் உபயோகிக்கின்றனர். சில நவீனர் இது மகமதியரிட்ட பெயரென்றும் மற்றவர் யவணர் ஸிந்து நதிக்கரையில் வசிப்பவராதலின் ஹிந்துக்களெனப் பெயரிட்டா ரென்றும் வேறு சார்பினர் இ·தறிஞர் பெயரென்றும் பிறர் ஓர்வகைச் சித்தாந்திகள் பெயரென்றும் மற்றவர் ஒதுக்கப் பட்டவர் பெயரென்றும் சிலர் பிரஷ்டர் பெயரென்றும் பலவழி சொல்லுகிறார்கள்." "இச் சொல் மகமதியர் விசேஷமாய் நெடுங்காலமாய் வியவகரிப்பதாய் ஆரட்ட பாஷை (அதாவது அரபிபாஷை). அதில் ஹிந்து என்று (அஞ்ஞானி என்னும் பொருளில்) இருக்கின்றது. அவர்கள் இந்த இந்தியா தேசத்தின் ஆக்ஷ¢யைக் கைக்கொண்ட பொழுது நம்மவர் ஞானிகளாகவும் மற்றவர் அஞ்ஞானிகளாகவும் எண்ணி இப்பெயரை இட்டார் என்பது."

4. தினமணி 10-3-1958 "ஹிந்தி என்ற வார்த்தையே இந்தியச் சொல் அல்ல என்று ராஜாஜி இங்கு தமிழர் அளித்த வரவேற்பில் பேசுகையில் கூறினார். பூர்வீக பாரசீகர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பூர்வீக குடிகள் பேசிய மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டனர் என்று அவர் விளக்கினார்"

5. R.K.முகர்ஜி என்பவர் சென்னைக் கோகலே ஹாலில் 27.09.1941ல் நடந்த கூட்டமொன்றில் பிரசங்கித்தது. "India and Hinduism are Organically related like body and soul. The name HINDUISM was given to them by Persians"

6. படுக்கை யறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லியின் கதை "கிறிஸ்து பிறந்த 1191 வது வருஷத்திலே சகாபுடீன் கோரி என்னப்பட்ட மகமதிய அரசன் டில்லி இராஜ்யத்தை ஜயித்து மகமதிய அரசை நிலைபெறச் செய்த போது இந்நாட்டவர்களாகிய ஆரியரை இந்துக்களென்று அழைக்கத் தொடங்கினர்.......இதனை இத்தேச புராதன சரித்திரமாகிய 'பாரத் பாகி' என்னப்பட்ட நூலிற் காணலாம்."

மேலும் படிக்க:- http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3558

இதே நாளில்...-மணி

செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கிய ஹென்றி டுனானட் பிறந்தநாள்.(08-05-1821)

சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள் தேதி : 09-05-1866

தென்னாப்ரிக்காவின் அதிபராக நெல்சன் மன்டேலா பதவி ஏற்றார். 10.05.1994

தாம்பரத்திற்கும் சென்னை கடற்கறைக்கும் இடையே முதல் மின்சார ரயில் விடப்பட்டது.(11.05.1931)

மேலும் படிக்க:-http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3161