என்னை ஜெயிக்க வையுங்கள்!- சக்தி பரஞ்சோதி

இது ஒரு மீள்பதிவு:- சக்தி அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். இப்பதிவைப் படிக்கும் நண்பர்கள் அனைவரும் சக்திக்கே 47ம் எண்ணில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சக்தி சொல்கிறார்:-

தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, அண்ணா, அக்கா, அண்ணி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்றும் அனைவரும் வாங்க, வாங்க. எனக்கு ஓட்டு போடுங்க. ஜெயிக்க வையுங்கள். நீங்க ஓட்டு போட்டால் மட்டும் போதாது, எல்லோரையும் ஓட்டு போட வையுங்க. உங்களை நம்பி தான் களத்தில் இறங்கி இருக்கேன்.

http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec4b_main.shtml

47-ம் எண் என்னுடையது. மறந்து விடாதீங்க, மறந்தும் இருந்து விடாதீங்க. என் அப்பா யார்னு தெரியும் இல்லே? சிறுவர் பூங்கா புகழ் பரஞ்சோதிதான்!

அன்புடன்
சக்தி.

சிநேகிதாவுக்கு வாக்களியுங்கள்!

நண்பர்களே!
http://www.indiaparenting.com/funtime/babyphotos2/2006dec2b_main.shtml

என்னுடைய நண்பர் முரளிமோகனின் அருமை புதல்வி ஒரு போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார், அவருக்கு உங்கள் பொன்னான வாக்கை செலுத்து வெற்றி பெற செய்யுங்கள்.உங்களை நம்பி அவரிடம் சவால் விட்டிருக்கிறேன், கவுத்திப்புடாதீங்க

போடுங்கய்யா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்கம்மா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்கண்ணா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து
போடுங்க அக்கா ஓட்டு நம்பர் # 33 சிநேகிதாவை பார்த்து

அன்புடன்,
பரஞ்சோதி.

ஏன் இந்த பெயர் வந்தது? - மன்னையார்

எதற்காக கூப்பிடுகிறோம் என்று தெரியாமலே நாம் பெயர்களை அழைக்கிறோம். அதிலும் பெயர்களை மொட்டை போட்டு கொச்சையாவும் அழைக்கிறோம். ஏன் இந்த பெயர் வந்தது?

1. சென்னை - சென்னபசவ நாயக்கன் என்பவன் தான் ஆண்ட பகுதியை 1600 வருடம் வாக்கில் வெறும் 10000 ரூபாய்க்கு கிழக்கிந்திய கம்பனியாரிடம் விற்றுவிட்டாராம். அவர் ஆண்ட பகுதியின் ஞாபகமாய சென்னப் பட்டணம் என்று அழைக்கப்பட்ட இடம் சென்னையாகி விட்டது.

மதராஸ் :- முகமதியர்கள் பலர் இங்கே பள்ளிவாசல்களை நிறுவி தொழுகை நடத்தியபடி இருந்ததால், மதராஸே என்று அழைக்கப்பட்டது பின் நாளில் மெட்ராஸாகிவிட்டது.

கோடம்பாக்கம் - கோடா பாக் : குதிரைகளும் அதை வளர்ப்பவர்களும் நிறைந்த பகுதியாய் இருந்த இடம் இன்று கோடம்பாக்கம் ஆகிவிட்டது.

மாம்பலம்: மாம்லான் எனும் ஆங்கிலேய கலக்டெர் தங்கியிருந்த இடம் இன்று மாம்பலமாகி விட்டது.

மா அம்பலம் :- ஒரு காலத்தில் மிகப் பெரிய சிவாலயம் இங்கிருந்ததாகவும் அந்த ஆலயம் அடங்கிய பகுதி மா அம்பலம் என வழங்கப் பட்டதாம். இன்றைய க்ருஷ்ணவேணி திரையரங்கமே ஒரு கோவில் மிகப் பெரிய திருக்குளம் என்று சொல்லப்படுகிறது.

சைதாப்பேட்டை: சதயு புரம் : சதயு எனும் மன்னன் 108 சிவாலயங்களை எழுப்பினான். அதில் 108வது சிவாலயம் சதயுபுரத்தில் இருக்கும் திருக்காரணீசன். சதயுபுரம் கூப்பிட வசதியாய் சைதாபேட்டையாகிவிட்டது.

கிண்டி:- ப்ருங்கி முனிவர் தன்னுடைய தவக்காலத்தில் பூஜைக்கான கிண்டியைப் பொருத்திய இடம் இன்று கிண்டியாகிவிட்டது.

பரங்கிமலை:- ப்ருங்கி முனிவர் வழிபட்ட சிவாலயம் இன்றும் பரங்கி மலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சர்ச்சுக்குள் பழைய கோவிலின் கட்டமைப்புகள் இருப்பாதாகச் சொல்லப்படுகிறது (ஆய்வுக்குரியது).

சேத்துப்பட்டு: மண்பாண்டம் செய்யும் குயவர்கள் அதற்கான மண்ணை இந்த பகுதியில் சேறு போல் குழைத்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்களாம். சேறு குழைத்த இடம் சேற்றுப்பட்டு.

எழுமூர்: இன்றும் சென்னையில் சூர்யோதயம் விழும் முதலிடம் எழுமூர். பூமி மட்டத்தின் மேல் தளத்தில் உள்ளது. சூரியன் எழுமூர் இன்று எழும்பூராகிவிட்டது. இதற்கு சாட்சி, தாஸப்ரகாஷ் அருகிலுள்ள சந்தில் இருக்கும் சிவனுக்கு எழுமீஸ்வரர் என்று பெயர்.திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாய் பாடப்பட்ட திருத்தலம்.

ராயபுரம்: பல்லவ மன்னனின் அமைச்சரவையில் இருந்த ராயர்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியம் ராயர்புரம் இன்று ராயபுரம்.

சிந்தாதரிப்பேட்டை: சின்ன தறிப் பேட்டை : சிறிய அள்விலே தறி வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கான துணிகளை நெய்த பகுதி இன்று சிந்தாதரிப்பேட்டை.

தண்டையார்பேட்டை : பல்லவ ராஜ்யத்தில் உள்ள கோவில்களின் கைங்கர்ய தொண்டை ப்ரதிபலன் பாராது ஆற்றி வந்த அன்பர்களுக்கான் குடியிருப்புக்கு கொடுக்கப் பட்ட மான்யம் தொண்டையார் புரி இன்று தண்டையார் பேட்டை.

புரசவாக்கம்: புரசைப் பாக்கம்: புரசுக் காடுகள் மண்டியிருந்த பகுதி இன்று புரசவாக்கம்.

அமிஞ்சிகரை: அமைந்தகரை அமர்ந்தகரை: ராமபிரான் (லவகுசர்களிடம் போரிட்டு வெற்றி காண முடியாமல்) அமர்ந்த கூவக்கரை இன்று அமைந்தகரை.

செங்கல்பட்டு: செங்கழுநீர் பட்டு : செங்கழுநீர் பூக்கள் நிறைந்த குளங்களை நிறைய கொண்ட இடம் இன்று செங்கல்பட்டு.

பெருங்களத்தூர் : பெரிய பெரிய குளங்களை தன்னகத்தே கொண்ட விவசாய பூமி இன்று பெரிய குளத்தூர் இன்று பெருங்களத்தூர்.

பல்லாவரம்: பல்லவபுரம் பல்லவர்கள் எழுப்பிய சமணப்பள்ளிகள் உள்ள இடம். அனகாபுத்தூர் அருகே இன்றும் காணலாம்.

பூந்தமல்லி : பூந்தண் எனும் அசுரனுக்கு ஈசன் மோக்ஷம் கொடுத்த இடம். மல்லிகாடுகள் அடர்ந்த இடம் இன்று பூந்தமல்லி.

நந்தம்பாக்கம்: நந்தர்கள் எனும் வம்சத்தவர்கள் ராமனை வரவேற்ற இடம் இன்று நந்தம்பாக்கம்.

ராமாபுரம்: ராமபிரான் தங்கிய மாஞ்சோலை இன்று ராமாபுரம்.

போரூர்: முருகப்பெருமான் சூரஸம்ஹாரத்திற்கு ஆயுதம் எடுத்த இடம் இன்று போரூர்.

கோவூர்: கோ- காமதேனு பூசித்த சிவாலயம் இன்று கோவூர்.

குன்றத்தூர்: குன்றுகள் நிறைந்த ஊர் (சீக்கிரம் போய் பாருங்க... ஏன்னா மல முழுங்கிங்க புல் டோசரோட காலி பண்ணிக்கிட்டிருக்காங்க).

ஸ்ரீ பெரும் பூதூர்: அசுர பூதங்கள் நிர்மாணம் பண்ணிய சிவாலயபுரி இன்று ஸ்ரீ பெரும்புதூர்.

சுங்குவார் சத்திரம்: பழங்காலத்தில் வரி வசூலித்த டோல்கேட் இன்று சுங்குவார் சத்திரம்.

நந்தனம்:- மா அம்பலத்திலிருந்த சிவாலய நந்தவனம் இருந்த இடம் இன்று நந்தனம். இங்கு பூமியுலிருந்து எடுக்கப்பட்ட நந்தி சிஐடி நகரில் இருக்கிறது.

யானை கவுணி : திருக்குடை வைபவத்தில் எம்பெருமான் யானை போல் ஒடி தாண்டினாராம்.ஒரே சமயத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் போடப்பட்ட பெரிய நுழைவயில் யானகவுணி.

மாதவரம்: மாதவன் ஈசனிடம் வரம் பெற்ற இடம் இன்று மாதவரம். புராதன சிவ்-விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.

திண்டிவனம் : திந்த்ரினி வனம் ( புளியங்காடு) இன்று திண்டிவனம்.

வடபழநி: பழய பெயர் புலியூர்கோட்டம்.

வளசரவாக்கம்: வள்ளி சேர் பாக்கம்: முருகப் பெருமான் வள்ளியோடு சேர்ந்த இடம் இன்று வளசரவாக்கம். இங்கு 7 அடி முருக விக்ரகம் பூமியிலிருந்து கிடைத்து கோவில் கட்டியிருக்கிறார்கள். எல்லா டீவி சீரியலிலும் தவறாமல் இக்கோவில் வரும்.

ஈக்காட்டுதாங்கல் : ஈர காடு தங்கல் : வருடத்தில் ஒருநாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் இங்கே ராத்தங்கலுக்கு வருவார். எங்குபார்த்தாலும் தண்ணீரில் மிதக்கும் காட்டிற்கு நடுவே எம்பெருமானின் சோலை இருந்ததாம். இன்று ஸ்வாஹா.......

முகப்பேர் : மகப்பேர் ஸந்தானபுரி.

முகலிவாக்கம் : கோவூர் ஈசனின் க்ரீடம் (மௌளி) இருந்த இடம் மௌளிவாக்கம் இன்று முகலிவாக்கம்.

அயனாவரம்: அயன் (ப்ரஹ்ம்மா பூசித்த சிவன்) வரம் பெற்ற இடம்.

மேலும் படிக்க:- http://muthamilmantram.com/showthread.php?p=148709#post148709

காவியக் காதல்!

அமரக் காதல் என்றால் நமது நினைவில் உடனே வருபவர்கள் அம்பிகாபதி-அமராவதிதான்.

அம்பிகாபதி கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மகன். அமராவதி குலோத்துங்க சோழ மன்னனின் மகள். கம்பர் குலோத்துங்கனின் அவைக்களப் புலவராக ஒட்டக்கூத்தருடன் சமமாக இருந்தார். அமராவதி அம்பிகாபதியின் புலமை மற்றும் இலக்கிய அறிவை வியந்து அவன் மேல் காதல் கொண்டாள். அம்பிகாபதியின் அறிவுத்திறனை எடுத்துக் காட்டும் சம்பவம் ஒன்றுண்டு.

ஒரு முறை கம்பர் ஒரு நெல்வயலுக்குச் சென்றிருந்தார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஏற்றம் என்ற சாதனத்தைத்தான் முன்பு பயன்படுத்தினர் ஏனென்றால் "பம்ப்" (pump) கண்டுபிடிக்கப் படவில்லை. அங்கே ஏற்றம் இறைப்பவன், "மூங்கிலிலை மேலே" என்ற இரண்டு வார்தைகளை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டே ஏற்றமிறைத்தான். கம்பருக்கு அதன் பிறகு என்ன வார்த்தைகள் பாடலில் வரும் என்று தெரியவில்லை. தந்தை ஏதோ சிந்தனையிலிருப்பதைக் கண்ட அம்பிகாபதி அவரிடம் விஷயத்தைக் கூறுமாறு கேட்டான்.

அவர் விஷயத்தைக் கூறியதும் அம்பிகாபதி,
"மூங்கிலிலை மேலே, தூங்கு பனி நீரே, தூங்கு பனி நீரை வாங்கும் கதிரோனே" என்ற வார்த்தைகளைக் கூறவும் கம்பர் அகமிக மகிழ்ந்து, "ஏற்றக் காரன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை, என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை" என்று கூறிப் புளகாங்கிதமடந்தார்.

அம்பிகாபதி ஒரு நாள் கம்பருடன் குலோத்துங்கனின் அவைக்குச் சென்றிருந்தான். அப்பொழுது அமராவதி அவனுக்கும் கம்பருக்கும் ஒரு தட்டில் நீர் கொணர்ந்து கொடுத்தாள். அவளது நடையழகை மிகவும் ரசித்த அம்பிகாபதி தன்னை மறந்து, "இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்கவட்டில் சுமந்து மருங்கசைய" என்று பாட ஆரம்பித்து விட்டான். அப்பொழுது ஒட்டக்கூத்தரும் அவையிலிருந்தார். ஒட்டக்கூத்தரின் குதர்க்க புத்தியைப் பற்றி நன்கறிந்த கம்பர் உடனே குருக்கிட்டு,'கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்' என்று பாடலை முடித்தார்.

இந்தச் சமாளிப்பை ஒட்டக்கூத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்பர் கலைமகளிடம் முறையிட்டார். சரஸ்வதி தேவி ஒரு மூதாட்டியாகத் தோன்றி, ஒரு கூடையில் கொட்டிக் கிழங்குகளை எடுத்துக் கொண்டு அரண்மனை வாயிலில் வந்து கூவினாள். அதனால் அம்பிகாபதி அன்று தப்பினான்.

அம்பிகாபதி - அமராவதி காதலுக்கு ஒட்டக்கூத்தர் வாயிலாகக் கடும் எதிர்ப்பு உருவானது. அதன்படி மன்னன் குலோத்துங்கன் அவர்கள் காதலுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். அம்பிகாபதி காதல் ரசம் இல்லாமல் தொடர்ந்து நூறு பாடல்கள் பாட வேண்டும். பாடி முடித்தால் அமராவதியை அடையலாம். தவறினால் மரண தண்டனையை ஏற்க வேண்டும். இதனையேற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான்.

அமராவதி ஒரு தட்டில் நூறு மலர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலராக எடுத்து வேறு ஒரு தட்டிலிட்டாள். இவ்வாறு பாடும் பொழுது முதல் பாடலான இறைவணக்கப் பாடல் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனை உணராத அமராவதி, அம்பிகாபதி இறைவணக்கப் பாடலுடன் சேர்த்து நூறு பாடல்களைப் பாடி முடித்ததும் பரவசத்தில் தன்னை மறந்து அம்பிகாபதியை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட பரவசத்தில் அம்பிகாபதி தன்னை மறந்து,

'சற்றே பருத்த தனமே துவளத் தரளவடம்
துற்றேயசையக் குழையூசலாட, துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேறிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே'

எனும் காதல் ரசம் ததும்பும் ஒரு பாடலைப் பாடி விட்டான். ஒட்டக்கூத்தர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்து அவன் மரண தண்டனை அடையும்படிச் செய்துவிட்டார்.

இந்தக் கதை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அம்பிகாபதியாகவும், பிரபல பாடகியும் நடிகையுமான பானுமதி அவர்கள் அமராவதியாகவும், எம். என். நம்பியார் அவர்கள் ஒட்டக்கூத்தராகவும், பழம்பெரும் நடிகர் எம். கே. ராதா கம்பராகவும் நடித்த "அம்பிகாபதி" திரைப் படத்தில் தத்ரூபமாகப் படமாக்கப் பட்டுள்ளது.

காதலியை அடைய வேண்டிய அம்பிகாபதி உணார்ச்சி மிகுதியால் காலனை அடைய நேர்ந்த இக்கதை இன்றைய காதலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். காதலில் வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்!

முத்தமிழ்மன்றத்திற்கு வாழ்த்துக்கள்!

உன்னை வாழ்த்துவதற்கு
பேதை என்னிடம்
வார்த்தைகள் ஏதும் இல்லை
உன்னில் நான் பல கவிஞர்களை
காண்கின்றேன்....பூரிப்பாகவுள்ளது....

முத்தமிழ் மன்றமே
என் வேலை
மணித்தியாலங்களில் பல
உன்னோடு முடிகின்றது...

நான் உன்னில்...இரசித்து
பார்ப்பது..இந்த கவி பக்கம்
மட்டுமே...
ஏனோ தெரியவில்லை....
என் நாட்கள் கூட முழுமை
அடைவதில்லை உன்னை நான்
ஒரு நாளாவது பார்க்காது போனால்..
இது உன்னில்...கவி......தவழ விடும்
பல உறவுகளுக்கு தெரியும்....

உன்னை ஆராதிக்க....
பலர் இருக்கின்ற போதிலும்
இதிலே இந்த பேதைக்கும்
ஒரு ஆசை வந்திட்டது...
உன்னை வாழ்த்துவதற்கு

முத்தமிழ்மன்றமே... நீ வாழி
உன் உன்னத கலைச்சேவை வாழி
உன்னில் கவி படைக்கும்
அனைத்து கவிஞர்களும் வாழி
என்றென்றும் உன் சேவை வாழியவே

முத்தமிழ் மன்றத்தினை...வாழ்த்த வயதோ...அனுபவமோ கானாது எனக்கு இருந்தும் ஒரு சிறிய ஆசை...தவறெனின் மன்னித்துவிடுங்கள் உறவுகளே...

நன்றிகளுடன்
இலங்கை பெண்...

இந்தியா முன்னேற யோசனைகள்!

பணம் எங்கும் புழுங்குகிறது. கறுப்பு வெள்ளை என்று நிறம் மாறுகிறது. இதை கட்டுப்படுத்த ஒரு யோசனை.

அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால் உங்கள் சம்பளம் 20000 என்று வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு பணமாக கிட்டாது. இன்னும் சொல்லப் போனால் அரசாங்கம் பணமே அச்சடிக்காது.

உங்களிடம் உள்ள அட்டையில் 20000 புள்ளிகள் கூடிவிடும். இந்த அட்டையை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றால் நீங்கள் செலவு செய்யலாம். உங்கள் அட்டையிலிருந்து நீங்கள் செலவு செய்த அளவிற்கு புள்ளிகள் குறைக்கப்பட்டுவிடும். பிறகு முடி திருத்தும் நிலையம் சினிமா எலெக்ட்ரானிக்ஸ் இப்படி எங்குமே பணம் இல்லை.

உங்களுக்கு பணம் கொடுப்பவர்கள் வங்கியின் மூலமாக மட்டுமே உங்கள் அட்டையிலிருக்கும் புள்ளிகளை அதிகரிக்க முடியும்.

இப்படியானால் ஒவ்வொரு குடிமகனின் செலவை அரசாங்கம் கண்கானிக்க இயலும். வரவையும் தான். இது கறுப்பு பணத்தையும் லஞ்சத்தையும் வெகுவாக குறைக்கும்.இதில் சங்கடம் என்னவென்றால் பாமர மக்களும் உபயோகிக்கும் அளவிற்கு இதை எளிமையாக்குவது தான்.

மேலும் நிறைய:-http://www.muthamilmantram.com/showthread.php?p=132302#post132302

ஆலோசகர்:- மோகன்.

புதிய தலைமை நடத்துனர் கிரி!

அன்புள்ள முத்தமிழ் மன்ற நண்பர்களே,

நமது மன்றத்தில் அருமையான பல பதிவுகளைத் தந்து கொண்டிருப்பவரும் மற்றவர்களுக்கு தம்மாலான உதவியைச் செய்து வருபவருமான ரத்தினகிரி அவர்கள் இன்றுமுதல் தலைமை நடத்துனர் ஆகிறார். இக்பால் மற்றும் ரத்தினகிரி ஆகியோர் தலைமை நடத்துனர்களாக இருந்து நமது மன்றத்தையும் உறுப்பினர்களையும் வழிநடத்துவார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். பதவி உயர்வு பெற்ற ரத்தினகிரி அவர்களை பாராட்டுவதில் பெருமை அடைகிறேன். இந்திய சுதந்திர நாள் வாழ்த்துக்களை நம் மன்ற நண்பர்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி.

இப்படிக்கு,
முத்தமிழ்.

===================================================================

அன்புத் தம்பி ரத்தினகிரி அவர்கள் முத்தமிழ் மன்றம் புதிய பொலிவைப் பெற்றுள்ள சுதந்திர தின இந்நன்னாளிலிருந்து தலைமை நடத்துனராக பதிவு உயர்வு பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.ரத்தினகிரி குறுகிய காலத்தில் நல்ல பதிவுகள் பல தந்து மன்ற உறுப்பினர்கள், நடத்துனர்கள் மற்றும் நிர்வாக நண்பர்கள் மனதில் இடம் நல்லதொரு இடம் பெற்றுள்ளார் என்பதை நினைவுக்கு கொண்டு வந்து அவரை நன்றியுடன் பாராட்டுகின்றோம்.எல்லோரும் தொடர்ந்து இதே மாதிரியான அன்புடனும், நட்புடனும் கூடிய ஆதரவினை அவருக்கு அளித்து, அவர் தன் பணியில் முன்னரை விட அதிக உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் உலா வர மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.

அன்புடன்,
இக்பால்.

அழகிய பெண்ணின் இலக்கணம் - மணி

வெண்மையாக இருக்க வேண்டியவை: பற்கள், சருமம், கைகள்.

கறுப்பாக இருக்க வேண்டியவை: கண்கள், புருவம், கண் இமைகள்.

சிவப்பாக இருக்க வேண்டியவை: உதடுகள், கண்ணங்கள், நகங்கள்.

நீளமாக இருக்க வேண்டியவை: கைகள், உடல், தலைமுடி.

குட்டையாக இருக்க வேண்டியவை: கால்கள், காதுகள், பற்கள்.

உருண்டையாக இருக்க வேண்டியவை: உதடுகள், புஜங்கள், காலின் பின்புறமுள்ள தசைகள்.

சிறிதாக இருக்க வேண்டியவை: இடை, கைகள், பாதங்கள்.

மென்மையாக இருக்க வேண்டியவை: உதடுகள், விரல்கள், கைகள்.

இவை எல்லாம் ஷேக்ஸ்பியரின் விளக்கங்கள் இவ்வாறு இருந்தால் ஷேக்ஸ்பியருக்கு பிடிக்கும். அனைவருக்கும் கட்டாயாமல்ல...

சிவாலயங்களில் செய்யத்தகாதன! - சிவசேவகன்

1. குளிக்காமல் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது!

2. மேல் வேட்டி, சட்டை முதலிய அணிந்து செல்லக் கூடாது!

3. சிரித்தல், சண்டையிடல், வீண் வார்த்தைகள் பேசல், உறங்கல் கூடாது!

4. சிவனார்க்கும், நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லுதல் கூடாது!

5. பலிபீடத்திற்கும், சன்னிதிக்கும் இடையே போதல் கூடாது!

6. அபிஷேகம் நடக்கும் போது உட் பிரகாரத்தில் வலம் வரல் கூடாது!

7. வழிபாட்டை அவசரமாக நிகழ்த்தல் கூடாது!

8. சுவாமிக்கு நேராக காலை நீட்டி வணங்கல் கூடாது!

9. ஈரமான ஆடை அணிந்து செல்லுதல் கூடாது, மயிர் கோதி முடித்தல் கூடாது!

10. பாதரட்சை, குடை முதலியன எடுத்துச் செல்ல கூடாது!

காஞ்சி மஹா பெரியவர் - நடமாடும் தெய்வம்

1893ம் ஆண்டிலே அவதரித்து 1994ம் ஆண்டிலே முக்தியடைந்த காஞ்சி மஹா பெரியவர் உலகத் தலைவர்களும், பிற மதத் தலைவர்களும் மதித்த ஒரு உத்தமமான ஜீவன்.

ஒரு முறை காஞ்சி மடத்தில், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவர்கள் மஹா பெரியவரை தரிசித்த பொழுது, மஹா பெரியவர் நீங்கள் ஐந்து முறை தொழுகை செய்கிறீர்களா? என வினவினாராம்.

இஸ்மாயில் அவர்கள் தான் நான்கு முறை மட்டுமே தொழுவதாகக் கூறினார்.

ஐந்து முறை தொழுவது உண்டல்லவா? என மஹா பெரியவர் கேட்டாராம்.

இஸ்மாயில் அவர்கள், ஆமாம் உண்டு. அர்த்தசாமம் எனும் நடுநிசியில் ஒரு முறைத் தொழவேண்டும். சிலர் மட்டுமே இதைச் செய்கிறார்கள்.

இதைக் கேட்ட மஹா பெரியவர்கள், உற்க்கத்தில் கூட இறை உணர்வு வரவேண்டும் என மனிதனை பண் படுத்திய வழிபாடுகள் உண்மையாய் கடைபிடிக்கப்பட்டால், சண்டை சச்சரவுகளே வாராது அல்லவா எனக் கேட்டு, நீங்களாவது ஐந்து முறை தொழுகை செய்யுங்கள் என்று கூறினாராம்.

*-*-*-*-*-*-*

ஒரு முறை தொழிலதிபர் பிர்லா அவர்கள், மஹாபெரியவர்களை தரிசிக்க வந்தார். வரும் பொழுது பல தட்டுக்களில் பழங்களை வைத்து கொண்டு வந்தார். அதில் ஒரு தட்டில் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளும் வைத்திருந்தார்.

தரிசனம் முடிந்து, பிர்லா கிளம்பு பொழுது, பெரியவர் தட்டில் என்ன வைத்திருக்கிறாய் எனக் கேட்டாராம். பிர்லாவும் காணிக்கை வைத்திருப்பதாகவும், இன்னும் பெரியவர் உத்தரவு பண்ணினால் காசோலையே தருவதாகக் கூறினார்.

இதைக் கேட்ட பெரியவர், ஒன்றும் இல்லாத எனக்கே நீங்கள் இவ்வளவு பணம் தருகிறீர்கள் என்றால், குடும்பத்தொடு அன்றாடம் போராடி வாழ்க்கை நடத்தும் மனுஷனுக்கு எவ்வளவு தேவைப்படும். ஆகவே இந்த பணத்தை நீங்களே எடுத்துக்கொண்டு கஷ்ட ஜீவனம் பண்ணும் எளியவர்களுக்கு கொடுத்து விடுங்கள் என்றாராம்.

வெளியே வந்த பிர்லா, தன்னுடன் வந்த நண்பரிடம் கூறினாராம் :- நான் பார்க்கும் பல ஆன்மீகவாதிகள் பணத்தை எப்படியெல்லாம் இரட்டிப்பாக்கலாம் என பல வழிகளில் பணம் சேர்க்கும் வேளையில், எதுவுமே தனக்கு வேண்டாம் என்று கூறும் மஹாபெரியவர் உண்மையிலேயே நடமாடும் தெய்வம் தான் என்றாராம்.

படித்ததில் பிடித்தது - ரத்தினகிரி

பிள்ளையார் சுழியைப் பற்றி ஒவ்வொருவரிடமும் கேட்ட போது:

நர்சரிக் குழந்தை: அம்மா போடச் சொன்னாங்க, போடலைன்னா சாமி அடிக்கும். போட்டா சாமி காப்பாத்தும்.

பள்ளி மாணவன்: சாமி கும்பிட்டு ஆரம்பித்தால் நல்லது. அதான்.

சாதாரண மக்கள்: ரொம்ப வருடம் பழகி விட்டது.

நாத்திகர்: அந்தக் காலத்தில் எழுத்தாணி அல்லது தொட்டு எழுதும் பேனா சரியாக எழுதுகின்றதா என்று சோதிப்பதற்காக ஒரு சிறு கீற்று. அதை இந்த மடமக்கள் பிள்ளையார், அது இது என்று காதில் பூச்சுற்ற ஆரம்பித்து விட்டனர்.

ஆன்மீகத்தினர்: கணபதி அனைத்திற்கும் ஆரம்பம். விக்னம் தீர்க்கும் விநாயகர் தான் ஆரம்பிக்கும் இச்செயல் விக்னமின்றி முழுமை பெற வழிபடும் முகமாகவே இக்குறியீடு. ஓம் என்ற பிரணவமே விநாயகர். அதன் திரிபு தான் உ என்ற எழுத்து.

அறிவியல் ஆன்மீகம்: உ என்ற வார்த்தை பூஜ்ஜியமும், நேர்கோடும் சேர்ந்த அமைப்பு. பூஜ்யம் என்பது ஆதியும் அந்தமும் இல்லாத பாரதம் கண்டுபிடித்த உயரிய அமைப்பு. அண்டமும் வட்டம் தானே! அது சுழலும் பாதையும் வட்டம் தானே. ஆதலின் சர்வ வியாபகம் உடைய சர்வ வல்லமையுடைய ஆதி அந்தமில்லா இறைவனை ஒரு சிறு வட்டத்தினைக் குறிப்பதன் மூலம் உணர்ந்து வழிபடுகிறோம்.

மின் உற்பத்தி செய்யும் டைனமோ அமைப்பில், காந்தத்தின் சுழற்சியில் மின்சக்தி வெளிப்படும். அணுவின் சுழற்சியில் சக்தியின் வெளிப்பாடும் இது போல் தான். சக்தியின் வெளிப்பாடு, நேர் கோட்டிலே தான் இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேல் உள்ள பரம்பொருளை பூஜ்யமாகவும், அதிலிருந்து வெளிப்படும் சக்தியை நேர்கோடாகவும் எழுதுவதே உ ஆகும். இந்த உலகத் தத்துவத்தை ஒரு எழுத்தில் உணர்த்துவது ஆன்மீகம்.

நன்றாகப் பாருங்கள், ஆயிரம்,லட்சம், கோடி தவிர அனைத்து தமிழ் எண்களும் உ வில் தான் முடிவுறும்!

------------------------------------------------------------------------------------
இவ்வாறு பல விஷயங்களைப் பற்றி சிவகாசியிலிருக்கும் மற்றொரு மருத்துவர் (எஸ். எஸ். பி போல்) பாலசுப்பிரமணியன் அவர்கள் குருகுலத்தில் ஒரு தொடர் எழுதியிருக்கிறார். அதிலிருந்து படித்ததில் பிடித்தது உங்களுக்காக.

மேலும் படிக்க தருகை தாங்க: http://www.muthamilmantram.com

இந்து என்று ஒரு மதமே கிடையாது! - சிவசேவகன்

1. உள்ளங்கவர் கள்வன் (By கி.வா.ஜகன்னாதன்)

"இந்துமதம் என்ற இக்காலத்தில் வழங்கும் பெயர் பலசமயங்களுக்கும் பொதுவானது. அப்படி ஒரு தனிச் சமயம் இல்லை. ஆனாலும் சைவம் வைணவம் முதலிய சமயங்கள் பலவற்றிற்குப் பொதுவாக அந்தப் பெயர் அயல் நாட்டவரால் வழங்கப் பெற்று நாளடைவில் நாமும் வழங்கும்படியாயிற்று"

2. காங்கிரஸ் 15-7-1956 (ஜுன் வெளிவந்த பிலிம் இண்டியாத் தமிழாக்கம்) "ஆங்கிலச் சரித்திரப் பேராசிரியர்கள் தான் முகலாயர்கள் இந்தியருக்கு கொடுத்து வந்த 'இந்து' என்ற பெயரை எடுத்துக் கொண்டு மேலும் மேலும் அழுத்தமாக வற்புறுத்தி ........ பிரிவினையை ஏற்படுத்துவதற்குக் காரண கர்த்தர்க்களாக இருந்தார்கள். முகலாயர்கள் இந்தியாவைப் படையெடுப்பதற்கு முன்பு ஹிந்துக்கள் என்ற பெயரே கிடையாது"

3. பிரம வித்தியா பத்திரிகை (புத்தகம் 4, இலக்கம் 14, பக்கம் 201, 202.) பக்கம் -201 "ஹிந்து என்னுஞ் சொல் புதியதே. இதைச் சிலபாஷாகவிகள் உபயோகிக்கின்றனர். சில நவீனர் இது மகமதியரிட்ட பெயரென்றும் மற்றவர் யவணர் ஸிந்து நதிக்கரையில் வசிப்பவராதலின் ஹிந்துக்களெனப் பெயரிட்டா ரென்றும் வேறு சார்பினர் இ·தறிஞர் பெயரென்றும் பிறர் ஓர்வகைச் சித்தாந்திகள் பெயரென்றும் மற்றவர் ஒதுக்கப் பட்டவர் பெயரென்றும் சிலர் பிரஷ்டர் பெயரென்றும் பலவழி சொல்லுகிறார்கள்." "இச் சொல் மகமதியர் விசேஷமாய் நெடுங்காலமாய் வியவகரிப்பதாய் ஆரட்ட பாஷை (அதாவது அரபிபாஷை). அதில் ஹிந்து என்று (அஞ்ஞானி என்னும் பொருளில்) இருக்கின்றது. அவர்கள் இந்த இந்தியா தேசத்தின் ஆக்ஷ¢யைக் கைக்கொண்ட பொழுது நம்மவர் ஞானிகளாகவும் மற்றவர் அஞ்ஞானிகளாகவும் எண்ணி இப்பெயரை இட்டார் என்பது."

4. தினமணி 10-3-1958 "ஹிந்தி என்ற வார்த்தையே இந்தியச் சொல் அல்ல என்று ராஜாஜி இங்கு தமிழர் அளித்த வரவேற்பில் பேசுகையில் கூறினார். பூர்வீக பாரசீகர் இந்தியாவுக்கு வந்தபோது இந்தியாவின் பூர்வீக குடிகள் பேசிய மொழிக்கு ஹிந்தி என்று பெயரிட்டனர் என்று அவர் விளக்கினார்"

5. R.K.முகர்ஜி என்பவர் சென்னைக் கோகலே ஹாலில் 27.09.1941ல் நடந்த கூட்டமொன்றில் பிரசங்கித்தது. "India and Hinduism are Organically related like body and soul. The name HINDUISM was given to them by Persians"

6. படுக்கை யறையில் பாசாங்கு செய்த பங்கஜவல்லியின் கதை "கிறிஸ்து பிறந்த 1191 வது வருஷத்திலே சகாபுடீன் கோரி என்னப்பட்ட மகமதிய அரசன் டில்லி இராஜ்யத்தை ஜயித்து மகமதிய அரசை நிலைபெறச் செய்த போது இந்நாட்டவர்களாகிய ஆரியரை இந்துக்களென்று அழைக்கத் தொடங்கினர்.......இதனை இத்தேச புராதன சரித்திரமாகிய 'பாரத் பாகி' என்னப்பட்ட நூலிற் காணலாம்."

மேலும் படிக்க:- http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3558

இதே நாளில்...-மணி

செஞ்சிலுவை சங்கத்தை தொடங்கிய ஹென்றி டுனானட் பிறந்தநாள்.(08-05-1821)

சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே பிறந்த நாள் தேதி : 09-05-1866

தென்னாப்ரிக்காவின் அதிபராக நெல்சன் மன்டேலா பதவி ஏற்றார். 10.05.1994

தாம்பரத்திற்கும் சென்னை கடற்கறைக்கும் இடையே முதல் மின்சார ரயில் விடப்பட்டது.(11.05.1931)

மேலும் படிக்க:-http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3161

ஏன் என்ற கேள்வி! - ரத்தினகிரி

ஒரு ஏ.கே. 47 துப்பாக்கியை வாங்க 100 டாலர் ஆகிறதாம். 3000 குழந்தைகளுக்குக் கண்ணுக்கு வைட்டமின் A மாத்திரை வாங்க இந்தப் பணம் போதுமானது.

ஒரு மில்லியன் கண்ணி வெடிகள் வாங்க 100 மில்லியன் டாலர் ஆகிறதாம். இந்தப் பணத்தில் 77 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியும்.

23 எஃப் - 86 ரக போர் விமானங்கள் வாங்க 800 மில்லியன் டாலர் ஆகிறதாம். இதைக் கொண்டு 1.6 பில்லியன் மக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அயோடின் கலந்த உப்பை வழங்க முடியும்.

மேலும் படிக்க:- http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=3070

மகா சதாசிவன் - சிவசேவகன்

இடதுகை பழக்கம் - மூர்த்தி

இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் பற்றி அண்மையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத் தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன், இடது கைப் பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்தார். இடது கைப் பழக்கம் கொண்ட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தார். இவரது ஆராய்ச்சியின்படி இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர, வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதையும் கண்டறிந்தார்.

இதற்கு முக்கியக்காரணம் இவர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக் காகவே எந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

ஒரே ஆறுதலான விஷயம், இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் இக்கட்டான சூழ்நிலை யிலும் சட்டென்று திடமான முடிவுகளை எடுப்பதுதான். வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் இது போன்ற நேரங்களில் தடுமாறி விடுகிறார்களாம்.

குழந்தையின் வளர்ப்பு சரியா? -பாலா

போனாவாரம் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். குழந்தைக்கு 2 முதல் மூன்று வயது இருக்கும் என்று நினைக்கிறேன். ஆண் குழந்தை. நன்றாக நடக்கிறான். ஏதற்கெடுத்தாலும் அழுகை. பெற்றோர்கள் ஒரு வார்த்தை கூட கடிந்து பேசுவதில்லை. அந்த குழந்தையும் கையில் கிடைக்கும் செல்போன் முதல் கொண்டு கன்னாபின்னாவென தூக்கிபோட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது. பெற்றோர்களும் அதுமாதிரி செய்ய கூடாது என்று கூட சொல்லவில்லை. அவர்கள் வீட்டில் உள்ள பெரிய எல்சிடி டிவி 59" இஞ்ச் டிவியை கூட எதோ ஸ்டூலால் தள்ளி அந்த டிவி இப்ப எல்லாத்தையும் ஒன்னுக்கு மன்னாக காண்பித்து கொண்டிருக்கிறது. ஸ்கிரீனில் உள்ள கலர்கள் போய்விட்டன. சொல்ல போனால் அநியாத்துக்கு செல்லம். கார்ட்லெஸ் போன், ட்வி ரிமோட் இப்படி எல்லாம் உடைந்துபோய்தான் இருக்கிறது. நாம் பொதுவாக அதிகபட்சம் குழந்தை எல்லைமீறி அழுதால் ஏய் என்று அதட்டுவோம். அட்லீஸ்ட் குழந்தை கொஞ்சமாவது அழுகையை நிப்பாட்டும் அல்லவா? இங்கே அது கூட இல்லை.

குழந்தைகளை அடிப்பதை கண்டால் பொறுக்காத எனக்கு இந்த குழந்தையை பார்த்தும் ஏனோ அடித்து வளர்க்கவேண்டும்போல் தோன்றுகிறது. இப்படியே விட்டால் அந்த பொருளின் அருமை அந்த குழந்தைக்கு எப்படி தெரியும்.? உண்மையில் குழந்தையை அப்படிதான் வளர்க்கவேண்டுமா?

கீரைபக்கோடா- பரஞ்சோதி

தேவையான பொருட்கள்:-

கடலைப் பருப்பு - 1 1/2 கப், அரைக் கீரை - 1 கட்டு, புதினா - 1 கைப்பிடி, கறிவேப்பிலை -சிறிது, மல்லித்தழை -சிறிது, மிளகாய் வற்றல் - 2 பச்சை மிளகாய் - 2 ,சோம்பு - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்­ரில் ஊறவைத்து பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டு, சோம்பு ஆகியவற்றைச் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக் கீரை, மல்லி, புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். அரைத்த விழுதுடன் உப்பு கீரை வகைகளைச் சேர்த்துப் பிசையுங்கள். சிறிது சிறிதாக எடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். சுடச்சுட சாப்பிட சுவையாக இருக்கும். தக்காளி சாஸ் தொட்டுக்கொண்டால் சுவை கூடும்.

ஆப்பிள் எனும் அருமருந்து- மஞ்சு சுந்தர்

ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.

பயன்கள்:-

கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.

குறைகள்:-

ஊட்டச்சத்துகள், பிற பழவகைகளை ஒப்பிடும் போது ஆப்பிளில் குறைவு ஆப்பிளின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்ச சொச்சங்கள் இருப்பது. ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிளை அப்படியே எடுத்துக் கொள்வதும் உண்டு. சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்தும் உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம். ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம். ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிடுவது நல்லது நன்றி: வெப் உலகம்.

டைட்டானிக் கப்பல்- சின்னமருது, சுபன்

இங்கிலாந்திலிருந்து நியூயார்க் நகருக்கு 1912-ல் புறப்பட்ட டைட்டானிக் என்ற பிரம்மாண்டமான பயணிகள் கப்பல், வடக்கு அட்லான்டிக் பெருங்கடலில் பாறையில் மோதி கவிழ்ந்துவிட்டது என்றுதான் இதுவரை கூறப்பட்டு வருகிறது. "இது சரியா?' என்று கேப் எலிசபெத் என்ற இடத்தைச் சேர்ந்த ரோஜர் லாங் கேட்கிறார். "அப்படியானால் அந்த கப்பல் எப்படி கவிழ்ந்தது?' என்று அவரையே கேட்டால், "அதைப் பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்' என்கிறார். பாறையில் கப்பல் மோதிய பிறகு அதன் வேகத்தைக் குறைத்து திசையை மாற்ற முற்பட்டபோது, அதன் வால் பகுதி உடைந்து 30 டிகிரி கோணத்தில் சாய்ந்தது என்று இதுவரை கூறப்பட்டு வருகிறது. இது சரியல்ல, 10 முதல் 11 டிகிரி வரை மட்டுமே அது சரிந்திருக்க வேண்டும் என்கிறார் ரோஜர் லாங். சுமார் 850 அடி நீளத்துக்கு இருந்த அக்கப்பல் கடலில் மூழ்கியபோது அதில் இருந்தவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். தனது முதல் பயணத்திலேயே மிகப்பெரிய விபத்தைச் சந்தித்தது டைட்டானிக்.

ஆனால் டைட்டானிக் ஆங்கிலப் படத்தில் மிகவும் வித்தியாசமான முறையில் படமாக்கி இருக்கின்றனர். படம் முழுக்கக் கற்பனைதான் என்றாலும் கதாசிரியர் தான் படித்த கேள்விப்பட்ட செய்திகளையே அந்தப் படத்தில் புகுத்தி இருக்கிறார். நடந்த சம்பவத்தில் அழகாக காதலையும் ஏற்றியது கதாசிரியரின் புதுமை.

டைட்டானிக் கப்பல்சார் விபத்துகளில் மிகவும் மோசமான விபத்துதாகும். இக்கப்பல் தனது கன்னி பயணத்தை southamton இலிருந்து new york city க்கு மேற்கொள்ளும் போது new foundland இற்கு தெற்கே 153 km தொலைவில் பனிப்பாறையுடன் மோதுண்டது. இது நடந்தது சித்திரை 14, 1912. இவ்விபத்தில் ஏறாத்தாழ 1513 பேர் இறந்தனர். இவர்களுள் அமெரிக்க கோடீஸ்வரர்களான John Jacob Astor, Benjamin Guggenheim மற்றும் Isidor Straus என்போர் அடங்குவர்.

இதில் தண்ணீர் உள்புக முடியா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் இதனை மூழ்கடிக்க முடியாதென அறிவித்தனர் இருந்தாலும் பனிப்பாறை இவற்றை எல்லாம் துவம்சம் செய்து மூழ்கடிக்க முடியா கப்பலை மூன்றே மணித்தியாலத்தில் மூழ்கடித்து விட்டது. பின் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளில் பனிப்பாறைகள் பற்றிய எச்சரிக்கையும் மீறி கப்பல் தலைவனால் மிக விரைவாக கப்பல் செலுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் உயிர் காக்கும் படகுகளும்(lifeboat) அங்கிருந்தவர்களுள் பாதிப்பேருக்கே போதுமானதாக இருந்தது. அருகிலிருந்தும் எந்தவொரு உதவியும் பெறமுடியவில்லை காரணம் அருகிலிருந்த californian இல் இருந்த வானொலி அலை கட்டுப்பாட்டாளர்(radio opperator) வேலையில் இல்லாமல்(off duty) உறங்கிகொண்டு இருந்தார். இவையே பின்பு கடல் வழி பிரயாணங்களின் போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வாகவந்தது.

அத்தீர்வுகள் ஆவன:-

முடிந்தவரை அனைவருக்கும் ஏற்ற மாதிரி உயிர் காக்கும் படகுகளை (lifeboat) எடுத்து வருதல்,24 மணி நேர ஆழ்கடல் அவதானிப்பு,சர்வதேச அளவில் பனிப்பாறைகள் பற்றிய அவதானிப்பு.

டைட்டானிக் 1985 இன் பின் முக்கிய விடயமாக மாறியது. காரணம் அந்த வருடம் தான் கப்பலின் உண்மையான் உடைந்த பாகங்கள் கடலின் கீழே 3800 மீற்றர்(12,000 அடி) ஆழத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. கப்பல் இருந்த இடம் பிரெஞ்சு அமெரிக்க ஆய்வாளர்களால் கடலுக்கடியில் புகைப்படம் பிடிக்க கூடிய கருவிகளால் புகைப்படம் பிடிக்கப்பட்டது. அதன் பிறகு 1986ஆம் ஆண்டு ஆடி மாதம் அமெரிக்க ஆய்வாளர்கள் கப்பலுக்கு அருகில் சென்று பாத்தனர். ஆனால் எதையும் மீட்கவில்லை.

அதற்கு அடுத்தவருடம் பிரெஞ்சு மீட்பு குழுவினர் கப்பலில் இருந்து நகைகள்,பணம் முதலியவற்றை எடுத்து 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பாரிஸ் நகரில் காட்சிபடுத்தினர். கப்பலை வெளிகொண்டுவரும் முயற்சிகள் சில பல காரணங்களால் கைகூடி வரவில்லை.

தங்கம் நமது அங்கம்- ரத்தினகிரி

கடந்த 6000 ஆண்டுகளில் உலகில் மொத்தம் சற்றேறக் குறைய 1,25,000 டன் தங்கம் உற்பத்தியாகியிருக்கிறது. இந்த வரலாறை இரண்டு காலங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். 1848க்கு முன், அதற்குப் பின் என்று. 1848 வரை மொத்தமே 10,000 டன் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் கடந்த 158 ஆண்டுகளுக்குள் மீதி 115000 டன் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே 90%க்கும் மேலான உலக தங்கம் 1848க்குப் பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் தங்கத்தை வெட்டி எடுத்தவர்கள் எகிப்தியர்களாக இருக்கலாமென்றும் கி.மு. 2000 ஆண்டு வாக்கிலேயே (இப்போது சூடான் மற்றும் சவுதி அரேபியா) ஆண்டுக்கு 1 டன் வரை எடுக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவே ரோமானியர்கள் காலத்தில் 5 முதல் 10 டன் வரை ஆண்டுக்கு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கி.பி. 500 - 1400 ஆண்டுவரை 1 டன்னுக்கும் குறைவாகவே எடுக்கப்பட்டு வந்துள்ளது. 15வது நூற்றாண்டில், தங்கக் கடற்கரை என்று ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பின் (தற்போது கானா) தங்கம் கிடைக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக அது மாறியது. அங்கிருந்து 5 முதல் 8 டன் வரை ஆண்டுக்கு எடுக்கப்பட்டது.

16வது நூற்றாண்டில் மெக்சிகோ மற்றும் பெருவில் மேலும் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. 17வது நூற்றாண்டில் தான் ஆண்டுக்கு 10-12 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. 18வது நூற்றாண்டில் ரஷ்யாவும் தன் பங்குக்கு தங்கத்தை எடுக்க ஆரம்பித்ததும் இது ஆண்டுக்கு 25 டன்னாக மாறியது. 1847ல் தான் அதுவரை இருந்த வரலாற்றிலேயே அதிக பட்சமாக ரஷ்யா 35 டன் எடுத்தது. அந்த ஆண்டில் உலக மொத்த உற்பத்தியே 75 டன் தான்.

1848. தங்க வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் 1914ம் ஆண்டு வாக்கில் ரஷ்யாவும் 60 டன் வரை தங்கம் ஆண்டுக்கு எடுக்க ஆரம்பித்து விட்டது. 1848ல் அமெரிக்காவின் நதிப் பகுதிகளில் சட்டரின் மில் (Sutter's Mill) கண்டுபிடிக்கப்பட்ட பின் தங்கத்தின் தலைவிதியே மாறிவிட்டது எனலாம். 1851லேயே 77 டன் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1853ல் 93 டன்னாக அதிகரித்தது. 1856ல் ஆஸ்திரேலியாவில் மட்டும் 95 டன் தங்கம் எடுக்கப்பட்டது. உலக உற்பத்தி அந்த ஆண்டில் 280 டன்னாக அதிகரித்தது. 1886ல் தென்னாப்பிரிக்காவில் விட்வாட்டெஸ்ரெண்ட் பேசின் (Witwatesrand Basin) கண்டுபிடிக்கப்பட்ட பின் மேலும் தங்க உற்பத்தி அதிகரித்தது. கிழக்குப் பகுதிகளில் 1873லேயே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1898ல் அமெரிக்காவுக்கு அதிகமாக தங்கம் அனுப்பியது ஆப்ரிக்காவாகும், அப்போதிருந்து இது இன்னும் நீடிக்கிறது. அந்த ஆண்டில் உலகின் மொத்த தங்கத்தில் 40% ஆப்ரிக்காவிலிருந்தே எடுக்கப்பட்டிருந்தது. 1970ல் தான் முதலில் தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1000 டன்னை எட்டியது. இதற்குள் 1893ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் கல்கூர்லி (Kalgoorlie) சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இந்தச் சுரங்கத்திலிருந்து மட்டும் 1300 டன் வரை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 1903ல் ஆஸ்திரேலியாவின் பங்கு 119 டன்னாகும். இதே அளவு 1988ல் தான் அவர்களால் எட்ட முடிந்தது மீண்டும். 1896ல் கனடாவின் யூகான் எல்லைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் படிமங்கள் மொத்தம் 75 டன் தங்கம் மூன்றாண்டுகளில் உற்பத்தி செய்ய ஏதுவாயிருந்தது.

இந்த நூற்றாண்டில் ஆண்டுக்கு 400 டன் வரை தங்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது மொத்த உலகமும். 20வது நூற்றாண்டில் தங்க உற்பத்தி தொய்வடைந்தது என்றே சொல்லலாம். 1940ல் அமெரிக்காவின் உற்பத்தி 155 டன்னாகவும், கனடாவின் உற்பத்தி 172 டன்னாகவும் இருந்தது. 1991 வரை இந்த எண்ணிக்கையை கனடாவாலேயே முறியடிக்க முடியவில்லை. 1980ல் ஏற்பட்ட தங்க விலை ஏற்றம் மூடிக்கிடந்த அனைத்து சுரங்கங்களுக்கும் புத்துணர்ச்சி அளித்தது. இதனால் ஆண்டுக்கு வெறூம் 962 டன்னாக இருந்த உற்பத்தி ஒரே ஆண்டில் 1744 டன்னாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் தாண்டிக் குதித்தது. இதற்குள் பிரேசில், வெனிசுலா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் தங்கம் எடுக்க ஆரம்பிக்கப் பட்டது. இதில் பிரேசிலிலுள்ள செர்ரா பெலாடா என்னும் சுரங்கம் 1983ல் மட்டும் 13டன் தங்கம் எடுத்துத் தந்தது.

1980களில் புகுத்தப்பட்ட நவீன சுரங்கத் தொழில் நுட்பம் இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது எனலாம். 1980ல் கனடாவின் 51.6 டன் தங்க உற்பத்தி ஒரே ஆண்டில் மும்மடங்காகி 175.3 டன் உற்பத்தியை ஈட்டித் தந்தது. தற்போது கண்டெடுக்கப்பட்ட ஹெம்லோ சுரங்கம் ஆண்டுக்கு 35 டன்னை உற்பத்தி செய்து தருகிறது. இன்னும் எதிர்காலத்திலும் அதிக தங்க உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக அறிய முடிகிறது. முக்கியமாக, பசிபிக் பெருங்கடலின் தீ வட்டம் (rim of fire) (இது என்ன தீ வட்டம் என்று தெரியவேண்டுமானால் அண்டத்தின் அற்புதங்களைப் பாருங்கள்!) கானா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களில் தங்கத்தின் சுரங்கங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.

1993ல் மீண்டும் ஒரு தங்க விலையேற்றத்தை உலகம் கண்டாலும், சுற்றுப் புற சூழலையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும் இப்போதைக்கு தங்கத்துக்கு தட்டுப்பாடு வராது என்றே தோன்றுகிறது.

புதுவையின் முதல் ஐஏஎஸ்- மணி

தமிழக முதல்வர்கள்!- மணி