காவியக் காதல்!

அமரக் காதல் என்றால் நமது நினைவில் உடனே வருபவர்கள் அம்பிகாபதி-அமராவதிதான்.

அம்பிகாபதி கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மகன். அமராவதி குலோத்துங்க சோழ மன்னனின் மகள். கம்பர் குலோத்துங்கனின் அவைக்களப் புலவராக ஒட்டக்கூத்தருடன் சமமாக இருந்தார். அமராவதி அம்பிகாபதியின் புலமை மற்றும் இலக்கிய அறிவை வியந்து அவன் மேல் காதல் கொண்டாள். அம்பிகாபதியின் அறிவுத்திறனை எடுத்துக் காட்டும் சம்பவம் ஒன்றுண்டு.

ஒரு முறை கம்பர் ஒரு நெல்வயலுக்குச் சென்றிருந்தார். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச ஏற்றம் என்ற சாதனத்தைத்தான் முன்பு பயன்படுத்தினர் ஏனென்றால் "பம்ப்" (pump) கண்டுபிடிக்கப் படவில்லை. அங்கே ஏற்றம் இறைப்பவன், "மூங்கிலிலை மேலே" என்ற இரண்டு வார்தைகளை மட்டும் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டே ஏற்றமிறைத்தான். கம்பருக்கு அதன் பிறகு என்ன வார்த்தைகள் பாடலில் வரும் என்று தெரியவில்லை. தந்தை ஏதோ சிந்தனையிலிருப்பதைக் கண்ட அம்பிகாபதி அவரிடம் விஷயத்தைக் கூறுமாறு கேட்டான்.

அவர் விஷயத்தைக் கூறியதும் அம்பிகாபதி,
"மூங்கிலிலை மேலே, தூங்கு பனி நீரே, தூங்கு பனி நீரை வாங்கும் கதிரோனே" என்ற வார்த்தைகளைக் கூறவும் கம்பர் அகமிக மகிழ்ந்து, "ஏற்றக் காரன் பாட்டுக்கு எதிர்ப் பாட்டில்லை, என் அம்பிகாபதிக்கு நிகர் யாருமில்லை" என்று கூறிப் புளகாங்கிதமடந்தார்.

அம்பிகாபதி ஒரு நாள் கம்பருடன் குலோத்துங்கனின் அவைக்குச் சென்றிருந்தான். அப்பொழுது அமராவதி அவனுக்கும் கம்பருக்கும் ஒரு தட்டில் நீர் கொணர்ந்து கொடுத்தாள். அவளது நடையழகை மிகவும் ரசித்த அம்பிகாபதி தன்னை மறந்து, "இட்டவடி நோக எடுத்தவடி கொப்பளிக்கவட்டில் சுமந்து மருங்கசைய" என்று பாட ஆரம்பித்து விட்டான். அப்பொழுது ஒட்டக்கூத்தரும் அவையிலிருந்தார். ஒட்டக்கூத்தரின் குதர்க்க புத்தியைப் பற்றி நன்கறிந்த கம்பர் உடனே குருக்கிட்டு,'கொட்டிக்கிழங்கோ கிழங்கென்று கூவுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்' என்று பாடலை முடித்தார்.

இந்தச் சமாளிப்பை ஒட்டக்கூத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. கம்பர் கலைமகளிடம் முறையிட்டார். சரஸ்வதி தேவி ஒரு மூதாட்டியாகத் தோன்றி, ஒரு கூடையில் கொட்டிக் கிழங்குகளை எடுத்துக் கொண்டு அரண்மனை வாயிலில் வந்து கூவினாள். அதனால் அம்பிகாபதி அன்று தப்பினான்.

அம்பிகாபதி - அமராவதி காதலுக்கு ஒட்டக்கூத்தர் வாயிலாகக் கடும் எதிர்ப்பு உருவானது. அதன்படி மன்னன் குலோத்துங்கன் அவர்கள் காதலுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். அம்பிகாபதி காதல் ரசம் இல்லாமல் தொடர்ந்து நூறு பாடல்கள் பாட வேண்டும். பாடி முடித்தால் அமராவதியை அடையலாம். தவறினால் மரண தண்டனையை ஏற்க வேண்டும். இதனையேற்று அம்பிகாபதி பாட ஆரம்பித்தான்.

அமராவதி ஒரு தட்டில் நூறு மலர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மலராக எடுத்து வேறு ஒரு தட்டிலிட்டாள். இவ்வாறு பாடும் பொழுது முதல் பாடலான இறைவணக்கப் பாடல் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதனை உணராத அமராவதி, அம்பிகாபதி இறைவணக்கப் பாடலுடன் சேர்த்து நூறு பாடல்களைப் பாடி முடித்ததும் பரவசத்தில் தன்னை மறந்து அம்பிகாபதியை நோக்கிச் சென்றாள். அவளைக் கண்ட பரவசத்தில் அம்பிகாபதி தன்னை மறந்து,

'சற்றே பருத்த தனமே துவளத் தரளவடம்
துற்றேயசையக் குழையூசலாட, துவர்கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேறிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே'

எனும் காதல் ரசம் ததும்பும் ஒரு பாடலைப் பாடி விட்டான். ஒட்டக்கூத்தர் அவனைக் கையும் களவுமாகப் பிடித்து அவன் மரண தண்டனை அடையும்படிச் செய்துவிட்டார்.

இந்தக் கதை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அம்பிகாபதியாகவும், பிரபல பாடகியும் நடிகையுமான பானுமதி அவர்கள் அமராவதியாகவும், எம். என். நம்பியார் அவர்கள் ஒட்டக்கூத்தராகவும், பழம்பெரும் நடிகர் எம். கே. ராதா கம்பராகவும் நடித்த "அம்பிகாபதி" திரைப் படத்தில் தத்ரூபமாகப் படமாக்கப் பட்டுள்ளது.

காதலியை அடைய வேண்டிய அம்பிகாபதி உணார்ச்சி மிகுதியால் காலனை அடைய நேர்ந்த இக்கதை இன்றைய காதலர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். காதலில் வேகத்தை விட விவேகமே முக்கியம் என்பதை உணர்ந்தால் வெற்றி நிச்சயம்!