சமூக அவலங்கள்! - மன்னை ராஜா

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கழித்தும் சில அப்பாவி மக்கள் இன்னும் தங்களுக்கு கிட்ட வேண்டிய அடிப்படை மனித உரிமைகளைக் கூட அடையாமல் இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும், அதன் விளைவாக அவ்வினங்களில் திடீர் தலைவர்கள் முளைத்து தவறான திசையில் இளைஞர்களின் வாழ்க்கையை திருப்பி விடுவதும் நம் கண்முன்னே நிகழும் சமூக அவலங்கள்..!

அந்த தாழ்த்தப்பட்ட இனப் பெரியவருக்கு நிகழ்ந்த ஒரு அவமானமும் அதை கண்டிருந்த ஒரு பிஞ்சு நெஞ்சத்தில் விழுந்த அடி பிற்காலத்தில் எவ்வாறு முடிவெடுக்க வைக்குமோ என்ற நியாயமான ஆதங்கமும் ஏற்படும் வகையில் என் கண்முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது..

ஒருமுறை எங்களின் விற்பனை வாகனம் பழுதுபட்டு மன்னை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் [ஊர் பெயர் வேண்டாமே..!] நின்றுவிட்டது. பழுது நீக்குவோர் வர தாமதமானதால் அருகில் உள்ள சிறு கோவிலில் அமர்ந்திருந்தேன். அரிசனங்கள் வாழும் பகுதி அது. இன்னும் மூன்றே நாட்களில் பொங்கலை எதிர்நோக்கி ஊர் ஒரு பரபரப்பைப் பூசிக்கொண்டிருந்தது.

அருகில் இருந்த வீட்டில் உள்ள உரையாடல் என் காதுகளில் வந்து விழுந்தது. ஒரு சிறுவன் தன் பாட்டனாரை கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்ல வேண்டிக்கொண்டிருந்தான். பெரியவருக்கு 65 வயதிருக்கும். கூடியவரை சமாளிக்கப் பார்த்தும் முடியாமல் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.இருவரும் தங்கள் வீட்டு வேலிப் படலை நீக்கி வெளியேறுவதற்கும் ஒரு 18 வயது இளைஞன் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீட்டு வழியே சாலையில் செல்வதற்கும் சரியாக இருந்தது.
பெரியவரைப் பார்த்ததும் இளைஞன் அரைவட்டம் அடித்து திரும்பி வந்தான்..

"எலே.. கழிஞ்சான்.. எங்கடா வெள்ளையும் சொள்ளையுமா கெளம்பிட்டே..?"

தன் பாட்டனாரைத்தான் அந்த இளைஞன் இப்படிக் கூப்பிடுகிறான் என்று அறிந்துகொள்ளவே சிறிதுநேரம் பிடித்தது அந்த சிறுவனுக்கு. அதிர்ச்சி விலகாத கண்களுடன் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான்.

வழிவழி வந்த அடிமைத்தனத்துடன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறு பெரியவர் சொன்னார்.." ஹி..ஹி.. வாங்க தம்பி.. பேரப்புள்ள கடைத்தெருவுக்கு கூப்பிட்டுது.. அதான்..." இதைச் சொல்லும்போது அவரின் உயரத்தில் இரண்டடியைக் காணோம்..!

அதானே பார்த்தேன்.. துண்டு எல்லாம் தோள்ல கெடக்கேன்னு...! ஏதோ செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டதுபோல் பதறி தன்னிச்சையாய்க் பெரியவரின் கை துண்டை தோளில் இருந்து எடுத்தது. கண்டும் காணாததுபோல் இளைஞன் கேட்டான்..

யாரு இது பிசுக்கு..?

எம்பேரனுங்க.. !

படிக்கிறானா..?

ஆமாங்க..!

பேரு என்ன ?

பிரகாசுங்க..!

ஹி..ஹி.. ம்ம் பிரகாஸ்.. சட்டென்று நினைவு வந்தவனாக...

ஏண்டா உம்பேரு அய்யாத்துரை தானே..?

பெரியவரைப் பார்த்து இளைஞன் கேட்க, அவர் அடிமைத்தனமாய் தலையாட்டினார். அந்த மேல்சாதி இளைஞன் காட்சிக்குள் பார்வையாளராக இருக்கும் என்னைப் பார்த்து சொன்னான்.. "சீவக்காரண்ணே.. இவனுக சரியான குசும்பு புடிச்ச பயலுக.. பேரெல்லாம் அய்யா, துரைன்னுதான் வச்சுக்குவானுங்க.. நாம அவனுகளைப் பார்த்து அய்யாங்கணுமாம்.. அதான் அப்பா பேர் வச்சாங்க..கழிஞ்சான்னு.. "

இப்போதும் பெரியவர் முகத்தில் அதே அடிமைச் சிரிப்பு. சிறுவனுக்கோ நிகழ்வுகளைச் சீரணிக்க முடியாமல் விழிகள் தெறித்துவிடும் போல இருந்தது.

இளைஞன் வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டே சொன்னான்.. சரி..சரி.. வேட்டி சட்டையெல்லாம் அவுத்துப் போட்டுட்டு வா ஒட்டடை அடிக்கணும்.. பெரியவரின் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டான்.

சிறுவனுக்கு கடைவீதி போகாதது பெரிய ஏமாற்றமாகப் படவில்லை.. இயந்திரமாக உடையை அவிழ்த்துக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்து கேட்டான்..

ஏன் தாத்தா.. பெரியவங்களை மரியாதையா அழைக்கணும்ன்னு எங்க டீச்சர் சொன்னாங்க.. ஆனா அந்த அண்ணன் உங்களை வாடா போடான்னு கூப்பிடறாங்க.. நீங்க ஒண்ணுமே சொல்லலையே...?

என்ன சொல்லுவார் பெரியவர்..? உங்களுக்கு ஏதாவது சொல்லத் தோன்றுகிறதா..?

மேலும் படிக்க....

தினகரன் நெம்பர்1 - மோகன்

தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன் என்று ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ஏ.பி.சி.) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் வெளியாகும் அனைத்து பத்திரிகைகளின் விற்பனையை கடுமையான சோதனைகள் மூலம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் ஏ.பி.சி. அமைப்பின் லேட்டஸ்ட் அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

புதிய வடிவில் வெளிவரத் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள் தினகரன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் முதலிடத்தை கைப்பற்றிய முதல் இந்திய நாளிதழ் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.பி.சி. ஒரு சுயேச்சையான தணிக்கை அமைப்பு. இதன் சான்றிதழ் தவறுகளுக்கு அப்பாற்பட்டது என்பதோடு, உலக அளவில் அங்கீகரிக்கப்படும் பெருமையும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.பி.சி. தனது தணிக்கை அறிக்கையை வெளியிடும். இப்போது வெளியாகி இருப்பது 2006 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத கால கணக்கெடுப்பு மற்றும் சோதனைகள் அடிப்படையிலான தணிக்கை அறிக்கையாகும். இதன்படி அந்த ஆறு மாதங்களில் 16 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 656 தினகரன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.

அதாவது, தினந்தோறும் சராசரியாக 9 லட்சத்து 657 தினகரன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. தினத்தந்தி 8 லட்சத்து 54,499 பிரதிகளும், தினமலர் 5 லட்சத்து 76,946 பிரதிகளும் விற்றுள்ளன. இதன் மூலம், தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில நாளேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்கூட தமிழகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான்!

தமிழ் அச்சுலகில் உயரிய தொழில்நுட்பம், நேர்த்தியான வடிவமைப்பு, செய்தி ரகம் பிரித்தல், உயிரோட்டமான வண்ணப் படங்கள், கருத்துத் திணிப்பற்ற நேர்மை, எளிய மொழிநடை, கிழமைக்கேற்ப மாறாத விலை ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எமது நோக்கத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த சாதனையை பார்க்கிறோம்.

மிகக் குறுகிய காலத்தில் கிடைத்திருக்கும் இந்த மகத்தான வெற்றி, உங்களைப் போன்ற லட்சோப லட்சம் வாசகர்கள் தினகரன் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடே என்பதை உணர்கிறோம். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் எங்கள் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தினகரன் நாளிதழ் மேலும் சாதனைகள் படைக்க

தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.என்.ஆர்.எஸ். என்று சொல்லப்படும் வாசகர்கள் எண்ணிக்கை தொடர்பான ஆய்வில் 96 லட்சத்து 39 ஆயிரம் வாசகர்களைப் பெற்று, அகில இந்தியாவிலும் மிக அதிக வாசகர்களைக் கொண்ட 8வது மிகப் பெரிய நாளிதழ் என்ற பெருமையை தினகரன் கடந்த ஆண்டு பெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மே 31ம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

புதிய வடிவில் வெளிவரத் தொடங்கிய மூன்றே மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

-தினகரன்

ஓரெழுத்து அர்த்தங்கள் - சுதாகர்

"அ"

1. திருமால்
2. சிவன்
3. 'எட்டு' என்னும் எண்ணின் குறி

'ஆ'

1. தோன்று / உண்டாகு (Come into Existence)
2. நிகழ் (happen, Occur)
3.முடிவுறு (to be finished, be done)
4. ஒத்துப்போ, இணக்கமாகு (be fit or agreeable)
5. உயர்வடை, சிறப்படை (Prosper, flourish)
6. ஆகு, ஆமை (be)
7. ஒப்பாகு (equal, match)
8. பொருத்து, கட்டு ( tie, bind)
9. நிகழ்த்து, செய்வி (cause, bring about)
10. ஆகுதல் (becoming)
11. எருது, மரை, எருமை ஆகியவற்றின் பெண்பால் (female of OX, Sombar and Buffalo)
12. காளை (bull)
13. ஆன்மா ( Soul)
14. முறை, விதம், ஆறு ( Way, Manner)
15. பசு (Cow)


'ஈ'

1. தானமாகக் கொடு, வழங்கு ( give alms, gift, donate)
2. கொடு, தா (give, offer)
3. படிப்பி ( give instruction)
4. படை, உண்டாக்கு (create, bring into existence)
5. நேர், இணங்கு (agree, consent)
6. ஈன் (bring forth)
7. ஈ / தேனி (இறக்கைகள் உடைய சிறிய உயிரின வகை) (fly)
8. நீக்கம், அழிவு (eradication, destruction)
9. வியப்புக் குறிப்பு (an exclamation of wonder)

'உ'

1. இரண்டு என்னும் எண்ணின் குறி (symbol for the number 2 & it's usually written with out the loop)
2. சிவனின் ஆற்றல் (Energy of Siva)

மேலும்.....

சூரியன், சந்திரன், நிலம் - சுதாகர்

சூரியன்

சூரியன்
அங்கி
அண்டயோனி
அருக்கன்
அருணன்
அழற்கதிர்
அற்கன்
ஆதபன்
ஆதி
ஆதித்தன்
ஆழ்வான்
இரவி
இருட்பகை
உச்சிக்கிழான்
உதயன்
ஊழ்
எரிகதிர்
எரிசுடர்
எல்
எல்லவன் (சந்திரனையும் குறிக்கும்)
எல்லோன்
எற்செய்வான்
என்றூழ்
ஒளியவன்
கடவுண்மண்டிலம்
கதிர்க்கடவுள்
கதிரவன்
கனலி
கிரணன்
சவிதா
சுடரோன்
சூரன்
செங்கதிர்
செஞ்சுடர்
ஞாயிறு
தபனன்
தரணி
தாமரைநாதன்
தாமன்
திகிரி
திவாகரன்
தினகரன்
தினமணி
தேரோன்
நிசாரி
பகல்செய்வான்
பதங்கன்
பரிதி
பனிப்பகை
பாஸ்கரன்
பிரபாகரன்
புலரி
மந்தி
மார்த்தாண்டம்
வாலரவி (காலைச் சூரியன்)
வான்கண்
வான்மணி
வானவன்
விண்மணி
விபாகரன்
விருச்சிகன்
விரோசனன்
வெங்கதிர்
வெஞ்சுடர்
வெயிலோன்


சந்திரன்

சந்திரன்
அந்திகாவலன்
அம்புலியம்மான்
ஆலோன்
இந்து
இரவன்
உடுக்கோன்
எல்லவன்
குபேரன்
குமுதநாதன்
சந்தமாமா
சீதன்
சுதாகரன்
சோமன்
தாரகாபதி
திங்கள்
நிலா
பசுங்கதிர்கடவுள்
பனிக்கதிர்
மண்டிலக்கடவுள்
மதி
மீனரசு
முயற்கூடு
முளரிப்பகை
வள்ளி
விது
வெண்கதிரோன்
வெண்மதிநீர்

1. நீர்
2. தண்ணீர்
3. அக்கரம்
4. அளறு
5. அறல்
6. ஆம்
7. ஆல்
8. ஆலம்
9. உண்ணீர்
10. உதகம்
11. கஞ்சம்
12. கடும்புனல் (விரைந்து ஓடும் நீர்)
13. கழிலிநீர் (கலங்கிய நீர்)
14. கவந்தம்
15. காண்டம்
16. கோ
17. சரம்
18. சலம்
19. சுந்து
20. திருஊரல் (ஊற்று நீர்)
21. தீத்தம்
22. தோயம்
23. நாரம்
24. பாணி
25. பானீயம்
26. பிப்பலம்
27. புனல்
28. புனை
29. வார்
30. ஜலம்

மேலும்...

ஆங்கிலம் அரிவோம்! - மாதவன்

1. மாணவர்களை வட்டவடிவமாக நிற்க எவ்வாறு சொல்லவேண்டும்? இப்படித்தான்...

All of you stand in a straight circle.

2. கண்ணாடி அணிந்த மாணவியை அழைப்பது எப்படி??

The girl with the mirror please comes her....

3. பலூனில் காற்று இல்லை என தெரிவிப்பது எப்படி??

There is no wind in the balloon.

மாணவன் ஒருவன் குறுக்கே பேசியதால் கோபத்தில் சொன்னவை...

4. I talk, he talk, why you middle middle talk?

மாணவர்களுக்கு தண்டனை அளிக்கும் முறைகள்.....

5. You, rotate the ground four times...
6. You, go and understand the tree...
7. You three of you stand together separately.

தலைப்பை பார்த்து(?) நாமும் நல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என நீங்கள் எண்ணி ஏமாந்தால் நான் பொறுப்பல்ல... இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. ஒரு பிரபல கல்லூரி தாளாளர் தனது மாணவர்களிடம் ஆங்கிலத்தில் பிறப்பித்த கட்டளைகள். இவை... இதைப்படித்து நீங்களும் பயன்(?) பெறுங்கள்...

மேலும் இங்கே...

http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20691

முக்கோண அலசல் - மன்னையார்

முதலில் தினகரனின் பிண்ணனி - கே.பி.கந்தசாமியால் நடத்தப்பட்ட பத்திரிகை அவ்வளவாக சர்க்குலேஷன் இல்லாமல் பேருக்கு இருந்த பத்திரிகை. ஒரு கட்டத்தில் கலைஞரே வேண்டாம் என கே.பி.கே முடிவு செய்து வைகோவிடம் சென்றபின் கடைசிவரை அது வைகோவின் ஆதரவாகத் தான் இருந்தது. பின்னர் அதை சன் டீவி வாங்கியது...( இதற்காகத்தான் சரத்குமார் தி.மு.க வை விட்டு வெளியேறினார்)

கோணம் 2: கலைஞர் சமீபத்தில் சன் டீவியில் தனக்கிருந்த பங்குகளை திரும்பப் பெற்றுக் கொண்டு, ஒரு பேட்டியில் விரக்தியாய் சொன்னார். மாறனைப் போலவே அவருடைய பிள்ளைகளை எதிர் பார்க்க முடியாது. வேண்டுமானால் அவர்கள் அறிவாலயத்தில் இருக்கட்டும். இல்லா விட்டால் அவர்கள் இஷ்டம்.

கோணம் 3 : தினகரன் கை மாறியதே தவிர அதன் ஊழியர்களெல்லாம் இன்னமு அப்படியே இருக்கிறார்கள்.இன்றும் கூட வைகோவைப் பற்றி தைரியமாக செய்திகள் வரும். ஆகவே சன் டீவி பத்திரிகையை வாங்கியதோடு அதை கண்காணிக்க வில்லை என்பது உண்மை.

கோணம் 4 : தினகரன் ஒரு திமுக பத்திரிகை என்ற நிலையில், முரசொலியைவிட சர்க்குலேஷன் எங்கேயோ போய்விட்டது. முரசொலி ஒரு பேப்பர் விக்கும் கடையில் 100 தினகரன் விற்று விடுகிறது. ஆகவே கலைஞரை மீறிய அசுர வளர்ச்சியில் தினகரன் இருப்பதால், கலைஞரின் விருப்பங்கள் அந்த பத்திரிகையில் அவ்வளவாக எடுபடவில்லை என்பதே உண்மை.

கோணம் 5: கருத்துக் கணிப்பு என்பது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றாகஎ எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னணி நம்மை யோசிக்க வைக்கும். இதுவரை கலைஞர் குடும்பத்திலிருந்த சூழ்நிலை என்ன என்பதை மாறன் குடும்பத்தவரக்ள் போட்டு உடைத்து விட்டனர். அத்துடன் மாறன் சகோதரர்கள், தாங்கள் இக்கால தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதை நாசூக்காய் கலைஞ்ருக்கு உணர்த்தி விட்டனர்.

கோணம் 6 ; கலைஞரே இந்த கருத்துக் கணிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என சொன்னாலும், இவரைக் கேட்டுவிட்டு அந்த பத்திரிகை எதையும் செய்வதில்லை என்பதற்கு சமீபத்திய அசம்பாவிதங்கள் ஒரு உதாரண்ம்.

கோணம் 7 : ஆக தினகரன் தான் இன்னமும் தனியான பத்திரிகை தான் என்பதை தக்க வைத்துக்கொள்ள போட்ட வலையில், பலர் பலியானது துரதிருஷ்டம். ராமதாஸ் சீரியஸ்ஸாய் கோபப் பட்டபோது ஏற்படாத விளைவுகள், அழகிரி மூலம் பத்திரிகை சந்தித்து விட்டது.

கோணம் 8 : கலைஞர் என்ற தனிமனிதனின் செல்வாக்கினால் அடைந்த பயன்கள் ஏராளமாய் இருந்தாலும் தாங்கள், என்றும் மாறன் குடும்பத்தவர்கள் தான் என்பதை மறைமுகமாக காட்டி விட்டார்கள்.

கோணம் 9 : தயாநிதி மாறன் மத்தியில் சிறந்த அமைச்சர் என்று சித்தரித்த கணிப்பு, அவரை கலைஞருக்கு அடுத்தபடியாய் காட்டாததும் அவர் மாநில அரசியலுக்கு லாயக்கில்லை என்பதையும் தோலுரித்து விட்டது.

கோணம் 10 : எல்லாவற்றிற்கும் மேலாக, 50ம் வருட பொன் விழா நெருங்கும் தருணத்தில் இது போன்ற நெருடல் மூலம் கலைஞரின் மனம் சஞ்சலப்பட்டதில்பலருக்கு சந்தோஷம் உண்டு ப்ண்ணக்கூட இந்த கணிப்பு உதவியிருக்கிறது.

ஆக கருணாநிதி - மாறன் - தினகரன் இந்த முக்கோண கணக்கில் எங்கு பார்த்தாலும் ஏதேனும் நெருடல்கள் இருப்பதை உணர முடிகிறது.

சொர்க்கத்தில் பில்கேட்ஸ்! - மாதவன்

நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.

நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.

‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே.. நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.

பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.

முதல்ல நரகம்.

ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.

ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?

கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.

அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு..

சரி.. கடவுளே.. நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,

கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.

அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.

யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியேனு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..

இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.

அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.

கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!

http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20504

எறும்பு - வைரமுத்து

எறும்புகளே எறும்புகளே
உயிர்த்துளிகளின் ஊர்வலங்களே
பத்துக்கோடி ஆண்டுகள் முன்னே
பூமியில் ஊர்ந்த பூச்சியினமே!

உலகின் மிகச்சிறிய ஆச்சரியமே!
உங்களோடு பேசவேண்டும்
சிறிதுநேரம் செவி சாய்ப்பீரா?

நின்று பேசி நேரம் கழிக்க
நாங்கள் ஒன்றும் மனிதர்கள் இல்லை
எது கேட்பதாயினும்
எம்மோடு ஊர்ந்து வாரும்

ஒரு செண்டி மீட்டரில்
ஊற்றி வைத்த உலகமே
அற்ப உயிரென்று
அவலப் பட்டதுண்டா?

பேதை மனிதரே
மில்லிமீட்டர் அளவிலும்
எம்மினத்தில் உயிருண்டு
தன் எடைபோல ஐம்பது
மடங்கு எறும்பு சுமக்கும்
நீர் சுமப்பீரா?

உங்கள் பொழுது போக்கு?

வாழ்வே பொழுது போக்கு
தேடலே விளையாட்டு
ஊர்தலே ஓய்வு

ஆறுமுதல் பத்து வாரம்
ஆயுள் கொண்ட வாழ்வு
இதில் ஓய்வென்ன ஓய்வு
தலை சாய்வென்ன - சாய்வு

இந்த ஆயுளுக்கா
இத்தனை பாடு?

உம்மைப் போல் எமக்கு
ஒற்றை வயிறல்ல
இரட்டை வயிறு
நெரிக்க ஒன்று
சேமிக்க ஒன்று

செரிக்கும் வயிறு எமக்கு
சேமிக்கும் வயிறு
இன்னோர் எறும்புக்கு
இரண்டு வயிற்றுக்குத்தான்
இத்தனை பாடு.

இனப் பெருமை பற்றிச்
சிறு குறிப்பு வரைக!

சிந்து சமவெளிக்கு முற்பட்டது
எங்கள் பொந்து நாகரிகம்

ராணிக்கென்று அந்தப்புரம்
உழைக்கும் எறும்புகள் வசிப்பறை
இறந்த எறும்பை அடக்கம் செய்ய
இடிபாடில்லாத இடுகாடு

மாரிகால சேமிப்புக் கிடங்கு
எல்லாம் அமைந்தது எங்கள்
ராஜாங்கம்

எங்கள் வாழ்க்கையின்
நீளமான நகல்கள்தான் நீங்கள்!

உங்களையே நீங்கள்
வியந்து கொள்வது எப்போது?

மயிலிறகால் அடித்தாலே
மாய்ந்துவிடும் எங்கள் ஜாதி
மதயானைக்குள் புகுந்து
மாய்த்துவிடும்போது.

நீங்கள் வெறுப்பது எது?
நேசிப்பது எது?

வெறுப்பது வாசல் தெளிக்கையிலே
வந்து விழும் கடல்களை
நேசிப்பது அரிசிமா
கோலமிடும் அண்ணபூரணிகளை

சேமிக்கும் தானியங்கள்
முளை கொண்டால் எது செய்வீர்?

கவரும்போதே தானியங்களுக்கு
கருத்தடை செய்து விடுகிறோம்
முளை களைந்த மணிகள்
முளைப்பதில்லை மனிதா!

உங்களால் மறக்க முடியாதது?

உங்கள் அகிம்சைப் போராட்ட
ஊர்வலத்தில் எங்கள் நான்காயிரம்
முன்னோர்கள் நசுங்கிச் செத்தது.

எதிர்வரும் எறும்புகளை
மூக்கோடு மூக்குரசும் காரணம்?

எங்கள் காலணி எறும்புதானா
வென மோப்பம் பிடிக்கும் முயற்சி
எம்மவர் என்றால் வழி விடுவோம்
அந்நியர் என்றால் தலையிடுவோம்

சிறிய மூர்த்திகளே
உங்கள் பெரிய கீர்த்தி எது?

அமேசான் காட்டு ராணுவ
எறும்புகள் யானை வழியில்
இறந்து கிடந்தால் முழு
யானையைத் தின்றே முன்னேறும்
மறவாதீர் எறும்புகளின்
வயிறுகள் யானைகளின்
கல்லறைகள்.

சாத்வீகம்தானே உங்கள்
வாழ்க்கை முறை?

இல்லை எங்களுக்குள்ளும்
வழிப்பறி உண்டு
எங்களுக்குள்ளும் யுத்தங்கள் உண்டு

அபாயம் அறிவிக்க
சத்தம் எழுப்பி
சைகை செய்வதுண்டு

எறும்புகளின் சத்தமா?
இதுவரை கேட்டதில்லையே!

மனிதர்கள் செவிடாயிருந்தால்
எறும்புகள்
என்ன செய்யும்?

நன்றி எறும்பே நன்றி!

நாங்கள் சொல்ல வேண்டும்
நன்றி உமக்கு
ஏன்? எதற்கு?

காணாத காமதேனுவைப் பற்றி
இல்லாத ஆதிசேஷன் பற்றி
பொய்யில் நனைந்த புராணம்
வளர்க்கும் நீங்கள்
இருக்கும் எங்களைப் பற்றி
இன்றேனும் எண்ணிப் பார்த்தீரே
அதற்கு!

மேலும் வைரமுத்து கவிதைகள்:-
http://www.muthamilmantram.com/viewtopic.php?p=249539#249539