சாகரனுக்கு கவியஞ்சலிகள் - தம்பியடா நீ - மூர்த்தி

மாமனிதர் சாகரனுக்கு மறுபிறப்பு கொடு இறைவா! - ஷீநிசி

நான் உன்னை
அறிந்த நிமிடங்கள் -நீ
இறந்த நிமிடங்களாயிருந்தது..

சாதிக்க விரும்பினாய்
என்று அறிந்தேன் -உன்மேல்
எங்களின் அன்பு எத்துணையென்று
சோதிக்கவும் விரும்பினாயோ?!

எத்தனை கனவுகள்
புதைந்துக்கொண்டிருந்தது உன்னுள்!
அத்தனை கனவுகளும்
புதைந்திடுமோ இனி மண்னுள்?!

நேசிக்கும் நண்பர்களை கொடுத்தாய்
அவருக்கு! -நல்லது இறைவா?
சுவாசிக்கும் நாட்களை குறைத்தாயே?!
நல்லதா இறைவா?

சார்ந்த உறவுகளின்
விழிகளை கொஞ்சம்
துடைத்துவிடு....

சாகரனை இன்றைக்கே
வேறொரு உயிரில்
படைத்துவிடு....

- கண்ணீருடன் வேண்டுவது ஷீநிசி

மாமனிதர் சாகரனுக்கு இரங்கல்பா - வெங்கடரங்கன்

உனக்காக வாழ்த்துப்பா பாட
உள்ளம் நினைக்கையில்
இரங்கற்பாவிற்கு ஏன் துணை நின்றாய்?

அனைவரின் நலனுக்காய்
துடிதுடித்த உன் இதயம்
உனது நலன் மறந்ததேன்?

சாதிக்கத் துடித்த நீ
சாதித்து விட்டாய் என
முடித்துக் கொண்டதோ வாழ்வு?

உனது எண்ணத்தோடு
கலந்து கொள்ளாமல்
ஊமையாகிப் போன வார்த்தைகள்!

மரண செய்திக் கண்டதும்
நிச்சயப்படுத்திக் கொள்ள முடியாத
உனது இளம் வயது!

சாகரனே
முத்தமிழ்மன்றத்தின் தூணே
நீயா இறந்து போனாய்?

உனது கனவுகள்
உன்னைக் காணாது
கலங்கித் தவிக்கின்றன

முகம் அறியாத உறவுகளிடம்
இனம் புரியாத நட்பு
கொண்டாட வேண்டும் திரும்பிவா!

- கண்ணீருடன் வெங்கடரங்கன்

மாமனிதரின் புகழ் ஓங்குக - கிரியின் கவியஞ்சலி

மன்ற மாமனிதரின் புகழ் ஓங்குக.

எல்லை அற்றுப்பரந்து விரிந்த கடல்
இல்லை கள்ளம் வெள்ளை மனமதில்
முதிர்ந்த பேச்சில் வயது தெரியாது
உதிர்ந்த மலரின் வாசம் மறையாது

சாகரன் எங்கள் மன்றத் தூண்
சாக வயதில்லா எங்கள் தோழனை
வேகமாய் காலன் இடித்த தூண்
ஆகமம் அடுக்கா பழி இதுகாண்

ஆழியாய் பெயர் வைத்த மாமன்னனே
ஆழிப் பேரலையாய் காலன் அழைக்க
ஊழிப் புயலாய் இதயம் வெம்பியழ
யாழில் சோககீதம் இசைக்கச் செய்தாயே

அஞ்சலி செய்யும் வயதா உனக்கு?
நெஞ்சு பொறுக்கு தில்லையே மனம்
மிஞ்சும் எதிர் காலம் யாதென்றே
நஞ்சு அருந்திய உடலாய் பதறுதே

மன்றத்தின் தெய்வமாய் உயர்ந்திட்ட சாகரன்
தென்றலாய் நண்பர் மனமதில் உறையட்டும்
இன்றுநாம் சூளுரைப்போம் உயிர் கொடுத்தும்
என்றும் இம்மாமன்ற மாறாப்புகழ் காக்க.

அண்ணன் சாகரனுக்கு அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா

அழுத விழியோடு தங்கையின் இரங்கல்பா... இலங்கை பெண்

சாதனையாளன் சாகரன் அண்ணாவே
சாதாரனமானவன் அல்ல நீங்கள்
சாதிக்க பிறந்த தமிழ்மகனல்லவா
சாதனைகளும் படைத்தீர்கள் அண்ணா

தமிழனாக பிறந்தீர் அண்ணாவே
தமிழுக்காக உழைத்தீரே அண்ணாவே
தமிழ் வாழ ஆசை கொண்டீரே அண்ணாவே
தமிழ்த்தாய் உம்மை என்றும் மறவாள்

கதிகலங்கி போனேன் நான் அண்ணாவே
காலையிலே வந்த முதல் நிமிடமே
காத்திருப்பில்லாமல் மன்றத்தினை திறப்பேன்
காலன் கொடிய செய்தியல்லவா கண்டேன் நான்

விதியினை வெல்ல முடியாத வாழ்விலே
விளையாட்டாகியதோ உள்ளங்கள் இன்று
விதி விளையாட்டிலே உம்மை இழந்திட்டோமே
விசர் பிடித்துவிட போகின்றது அண்ணாவே

மூன்று நாட்களுக்கு பின் மன்றத்தினை காண
மும்மரமாக வந்தேன் நான் இன்றைய தினம்
முத்தாய் பல முத்துக்கள் கொட்டிகிடக்குமே
முகம் மலரவில்லை முதல் பதிவினை கண்டு

அன்பு அண்ணாவே அழுகின்றேன் நான் இங்கே
அறிமுகம் இல்லாத உறவாகினும் அண்ணாவே
அன்புள்ளம் உங்கள் உள்ளம் என்றோ என் மனதில்
ஆணித்தரமாக பதிந்துவிட்டது அண்ணாவே

இழந்துவிட்டோமே உம்மை நாம் அண்ணாவே
இழக்க முடியாத இழப்பினை எண்ணி ஏங்குகின்றோம்
இழந்த உயிரை மீண்டும் பெற ஒரு வரம் கிடைத்தால்
இனிய அண்ணாவே உங்களின் உயிரை கேட்டெடுப்பேன்

துக்கங்கள் என் வாழ்வில் புதிதில்லை அண்ணாவே
துவண்டே பழகியும் போனது அண்ணாவே
துவழுகின்றேன் நானிங்கு உங்களின் இழப்பாலே
துக்கத்தை ஆற்ற முடியாமல் தவிக்கின்றேன் தனிமையிலே

இந்தியாவில் இருந்திருந்தால் நேரடியாக வந்திருப்பேன்
இருக்கும் இடமோ கடல் தாண்டிய இடமாச்சே அண்ணா
இங்கிருந்தே தேம்பி அழுகின்றேன் என் அண்ணாவே
இறுதி நிகழ்வில் கூட கலந்து கண்ணீர் விடமுடியாமலே

எங்கிருந்தோ வந்தோம் நாம் எல்லோரும் அண்ணாவே
எதிர்பார்புகள் இல்லாமல் சந்தித்தோம் அண்ணாவே
ஏனோ இறைவனுக்கும் பொறுக்கவில்லை அண்ணாவே
எங்களின் இன்ப உறவு பிணைப்பினை அண்ணாவே

தங்களின் ஆத்மா சாந்தியடையவே வேண்டி அண்ணாவே
தாமதமாக என்றாலும் தரணி முழுவதும் நாம் சொல்வோம்
தந்தீரே உன்னத சேவை எம் மன்றத்துக்கு நீவீர் என்றுமே
தரணி முழுவதும் வாழும் உங்களின் உயிர் எம் மனதிலே

விக்கித்து போய் நிக்கின்றேன் நானிங்கே அண்ணாவே
விசனமாக இருக்கின்றது கடவுளின் மேல் அண்ணாவே
விடியற்காலையிலே விழி பிதுங்கி போனேன் அண்ணாவே
விடியதா இரவுகளில் எத்தனை கனவுகளின் கோலங்கள்

வேண்டுகின்றேன் இறைவனின் திருப்பாதத்திலே அண்ணாவே
வேதனையில் நிக்கும் உங்கள் குடும்பத்தினருக்காவே அண்ணாவே
வேற்று பிறப்பில் அதே கல்யானாக பிறந்திடுங்கள் அண்ணாவே
வேதனைகள் தாங்காத என் உள்ளம் என்றுமே வேதனையிலே....

அண்ணாவே ஆணிவேராக இருந்த அண்ணாவே உங்களின் ஆத்மா சாந்தியடைய
சிறியவள் உங்கள் தங்கை இறைவனிடம் மன்றாடுகின்றேன் உங்களின்
குடும்பத்தினரையும் ஆறுதல் படுத்தனும் இறைவன் இரக்கமில்ல்லாமல் செய்த
செயலினால் பரிதவிக்கின்றோம் இங்கு நாம் எல்லோருமே....

சாகரன் அண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்...

சாகாவரம் பெற்ற சாகரனுக்கு காவியனின் கவியஞ்சலிகள்

எங்கள் பிரம்மா சாகரன் அவர்களின் உடல் வேண்டும் என்றால் எங்களை விட்டு போயிருக்கலாம், அவர் மூச்சு, அவர் உயிர், அவர் திறமைகள் அனைத்தும் என்றும் இவ்வுலகில் நிலைத்திருக்கும்.

முத்தமிழ் மன்றம், தேன்கூடு, பாலகுமாரன், துவக்கு, இன்னும் பல்வேறு தளங்களை படைத்த பிரம்மாவுக்கு எங்கள் கவியஞ்சலிகள்.

----------

காவியனின் கவியஞ்சலி

சாகரனே...
இணைய உலகின்
இணையில்லா சாதனையாளனே
எங்கே சென்றாய் எமை விட்டு..

பட்டு பூச்சியாய்
உனை வட்டமிட்ட
சின்ன சிட்டு மகளை விட்டு
எட்ட ஏன் சென்றாய்....

விம்மி விம்மி
அழுது துடிக்கும் உன்
அன்பு மனையாள் விட்டு
எட்ட ஏன் சென்றிட்டாய்

இனிய நண்பன் உனக்கு
இதய நோய் தந்திட்ட அந்த
இறைவனுக்கு இரக்கமில்லையோ

நண்பா...
தமிழ் மணக்கும் இணையங்கள் மேல்
இடி விழுந்து போயிற்று
முத்தமிழ் மன்றம் இன்று
முகாரியே பாடுது...

தமிழ்த் தாய் முக்குளித்து
எடுத்த எங்கள்
முத்து சிப்பியே...
உனை நான் பார்த்தறியேன்
இரு தினம் முன்
இணயத்தில் படித்தேன்
தமிழ் வளர்க்க நீ
தாயாய் உழைத்ததும்
முத்தமிழ் மன்றுக்கு நீ
தகப்பன் ஆனதும்...

நேற்றைய பொழுது நீ
மடிந்திட்ட செய்தி கேட்டு
என் தலை
மேல் இடி விழுந்து போயிற்று
மூச்சு முட்டிப் போனது
இதயத்து இரத்தம்
கண் வழியே கண்ணிராய் ஓடிற்று

கதி கலங்கி நிற்குதய்யா இணையம்
இதய வலி உனை
இறைவனடி சேர்த்தது கேட்டு
இதயங்களில் இரத்தக் கண்ணீர் வடிகிறது

இறைவா
இனி ஒரு கல்யாணை எமக்கு
கனவிலேனும் தருவாயா?...

சாகரன் என்ற சாதனையாளனே
நீ.....
சாகா வரம் பெற்றுவிட்டாய்
இணையங்கள் மூலம்
எம்
இதயங்கள் வென்றுவிட்டாய்
மண் விட்டு போகலாம்
உன் உடல்....
எம் மனம் விட்டு போகாது
உம் உயிர்....
எம் நினைவில் என்றும்
நீர் வாழ்வீர்.....

கண்ணீர் அஞ்சலி!



ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், எழுத்துக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளரும், தேன்கூடு திரட்டியை தோற்றுவித்தவரும், முத்தமிழ்மன்றத்தின் நிர்வாகியுமான திரு. கல்யாண்(சாகரன்) அவர்கள் நேற்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். அவரது உடல் ஒபய்த் ஹாஸ்பிடலில் தற்சமயம் உள்ளது என்பதனை மிகவும் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

முத்தமிழ்மன்றம் உருவாகக் காரணமாக இருந்த முக்கிய தூணை இழந்து தவிக்கிறோம். 1978ல் பிறந்தவர். 28 வயது முடிந்து இன்னும் 29கூட ஆகாதவர். இந்த வயது இறக்கும் வயதா???

இதுபோன்ற கொடுஞ்செயல்களைப் பார்க்கும்போது இறைவன் இருக்கின்றானா என்று கேட்கத் தோன்றுகிறது. மனைவி, மூன்று வயது குட்டிப் பாப்பா வர்ணிகா, அப்பா, அம்மா, தங்கை ஆகியோரைப் பிரித்து அவரை அழைத்துச் சென்ற காலனை நினைத்தால்... கோபமாக வருகிறது.

கல்யாணின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். கல்யாணின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைத் தொழுவோம்.

பிரிவால் வாடும்,
முத்தமிழ்மன்ற நண்பர்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:-

1.ரியாத் தமிழ்ச்சங்கம்
2.சந்திரமதி கந்தசாமி
3.துளசிகோபால்
4.நாமக்கல் சிபி
5.தமிழ்மணம்
6.சிந்தாநதி
7.முத்தமிழ்மன்றம்