தங்கம் நமது அங்கம்- ரத்தினகிரி

கடந்த 6000 ஆண்டுகளில் உலகில் மொத்தம் சற்றேறக் குறைய 1,25,000 டன் தங்கம் உற்பத்தியாகியிருக்கிறது. இந்த வரலாறை இரண்டு காலங்களாகப் பிரித்துப் பார்க்கலாம். 1848க்கு முன், அதற்குப் பின் என்று. 1848 வரை மொத்தமே 10,000 டன் மட்டுமே வெட்டி எடுக்கப்பட்ட தங்கம் கடந்த 158 ஆண்டுகளுக்குள் மீதி 115000 டன் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே 90%க்கும் மேலான உலக தங்கம் 1848க்குப் பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் தங்கத்தை வெட்டி எடுத்தவர்கள் எகிப்தியர்களாக இருக்கலாமென்றும் கி.மு. 2000 ஆண்டு வாக்கிலேயே (இப்போது சூடான் மற்றும் சவுதி அரேபியா) ஆண்டுக்கு 1 டன் வரை எடுக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவே ரோமானியர்கள் காலத்தில் 5 முதல் 10 டன் வரை ஆண்டுக்கு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கி.பி. 500 - 1400 ஆண்டுவரை 1 டன்னுக்கும் குறைவாகவே எடுக்கப்பட்டு வந்துள்ளது. 15வது நூற்றாண்டில், தங்கக் கடற்கரை என்று ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பின் (தற்போது கானா) தங்கம் கிடைக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக அது மாறியது. அங்கிருந்து 5 முதல் 8 டன் வரை ஆண்டுக்கு எடுக்கப்பட்டது.

16வது நூற்றாண்டில் மெக்சிகோ மற்றும் பெருவில் மேலும் தங்கம் கண்டு பிடிக்கப்பட்டது. 17வது நூற்றாண்டில் தான் ஆண்டுக்கு 10-12 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டது. 18வது நூற்றாண்டில் ரஷ்யாவும் தன் பங்குக்கு தங்கத்தை எடுக்க ஆரம்பித்ததும் இது ஆண்டுக்கு 25 டன்னாக மாறியது. 1847ல் தான் அதுவரை இருந்த வரலாற்றிலேயே அதிக பட்சமாக ரஷ்யா 35 டன் எடுத்தது. அந்த ஆண்டில் உலக மொத்த உற்பத்தியே 75 டன் தான்.

1848. தங்க வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. கலிபோர்னியாவில் தங்கச் சுரங்கம் கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் 1914ம் ஆண்டு வாக்கில் ரஷ்யாவும் 60 டன் வரை தங்கம் ஆண்டுக்கு எடுக்க ஆரம்பித்து விட்டது. 1848ல் அமெரிக்காவின் நதிப் பகுதிகளில் சட்டரின் மில் (Sutter's Mill) கண்டுபிடிக்கப்பட்ட பின் தங்கத்தின் தலைவிதியே மாறிவிட்டது எனலாம். 1851லேயே 77 டன் எடுக்கப்பட்டது. இந்த ஆண்டிலேயே ஆஸ்திரேலியாவிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1853ல் 93 டன்னாக அதிகரித்தது. 1856ல் ஆஸ்திரேலியாவில் மட்டும் 95 டன் தங்கம் எடுக்கப்பட்டது. உலக உற்பத்தி அந்த ஆண்டில் 280 டன்னாக அதிகரித்தது. 1886ல் தென்னாப்பிரிக்காவில் விட்வாட்டெஸ்ரெண்ட் பேசின் (Witwatesrand Basin) கண்டுபிடிக்கப்பட்ட பின் மேலும் தங்க உற்பத்தி அதிகரித்தது. கிழக்குப் பகுதிகளில் 1873லேயே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1898ல் அமெரிக்காவுக்கு அதிகமாக தங்கம் அனுப்பியது ஆப்ரிக்காவாகும், அப்போதிருந்து இது இன்னும் நீடிக்கிறது. அந்த ஆண்டில் உலகின் மொத்த தங்கத்தில் 40% ஆப்ரிக்காவிலிருந்தே எடுக்கப்பட்டிருந்தது. 1970ல் தான் முதலில் தங்க உற்பத்தி ஆண்டுக்கு 1000 டன்னை எட்டியது. இதற்குள் 1893ல் மேற்கு ஆஸ்திரேலியாவில் கல்கூர்லி (Kalgoorlie) சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை இந்தச் சுரங்கத்திலிருந்து மட்டும் 1300 டன் வரை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 1903ல் ஆஸ்திரேலியாவின் பங்கு 119 டன்னாகும். இதே அளவு 1988ல் தான் அவர்களால் எட்ட முடிந்தது மீண்டும். 1896ல் கனடாவின் யூகான் எல்லைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்கப் படிமங்கள் மொத்தம் 75 டன் தங்கம் மூன்றாண்டுகளில் உற்பத்தி செய்ய ஏதுவாயிருந்தது.

இந்த நூற்றாண்டில் ஆண்டுக்கு 400 டன் வரை தங்கம் எடுக்க ஆரம்பித்திருந்தது மொத்த உலகமும். 20வது நூற்றாண்டில் தங்க உற்பத்தி தொய்வடைந்தது என்றே சொல்லலாம். 1940ல் அமெரிக்காவின் உற்பத்தி 155 டன்னாகவும், கனடாவின் உற்பத்தி 172 டன்னாகவும் இருந்தது. 1991 வரை இந்த எண்ணிக்கையை கனடாவாலேயே முறியடிக்க முடியவில்லை. 1980ல் ஏற்பட்ட தங்க விலை ஏற்றம் மூடிக்கிடந்த அனைத்து சுரங்கங்களுக்கும் புத்துணர்ச்சி அளித்தது. இதனால் ஆண்டுக்கு வெறூம் 962 டன்னாக இருந்த உற்பத்தி ஒரே ஆண்டில் 1744 டன்னாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் தாண்டிக் குதித்தது. இதற்குள் பிரேசில், வெனிசுலா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் தங்கம் எடுக்க ஆரம்பிக்கப் பட்டது. இதில் பிரேசிலிலுள்ள செர்ரா பெலாடா என்னும் சுரங்கம் 1983ல் மட்டும் 13டன் தங்கம் எடுத்துத் தந்தது.

1980களில் புகுத்தப்பட்ட நவீன சுரங்கத் தொழில் நுட்பம் இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்தது எனலாம். 1980ல் கனடாவின் 51.6 டன் தங்க உற்பத்தி ஒரே ஆண்டில் மும்மடங்காகி 175.3 டன் உற்பத்தியை ஈட்டித் தந்தது. தற்போது கண்டெடுக்கப்பட்ட ஹெம்லோ சுரங்கம் ஆண்டுக்கு 35 டன்னை உற்பத்தி செய்து தருகிறது. இன்னும் எதிர்காலத்திலும் அதிக தங்க உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக அறிய முடிகிறது. முக்கியமாக, பசிபிக் பெருங்கடலின் தீ வட்டம் (rim of fire) (இது என்ன தீ வட்டம் என்று தெரியவேண்டுமானால் அண்டத்தின் அற்புதங்களைப் பாருங்கள்!) கானா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களில் தங்கத்தின் சுரங்கங்கள் அமைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.

1993ல் மீண்டும் ஒரு தங்க விலையேற்றத்தை உலகம் கண்டாலும், சுற்றுப் புற சூழலையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும் இப்போதைக்கு தங்கத்துக்கு தட்டுப்பாடு வராது என்றே தோன்றுகிறது.

0 comments: