சமூக அவலங்கள்! - மன்னை ராஜா

நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கழித்தும் சில அப்பாவி மக்கள் இன்னும் தங்களுக்கு கிட்ட வேண்டிய அடிப்படை மனித உரிமைகளைக் கூட அடையாமல் இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும், அதன் விளைவாக அவ்வினங்களில் திடீர் தலைவர்கள் முளைத்து தவறான திசையில் இளைஞர்களின் வாழ்க்கையை திருப்பி விடுவதும் நம் கண்முன்னே நிகழும் சமூக அவலங்கள்..!

அந்த தாழ்த்தப்பட்ட இனப் பெரியவருக்கு நிகழ்ந்த ஒரு அவமானமும் அதை கண்டிருந்த ஒரு பிஞ்சு நெஞ்சத்தில் விழுந்த அடி பிற்காலத்தில் எவ்வாறு முடிவெடுக்க வைக்குமோ என்ற நியாயமான ஆதங்கமும் ஏற்படும் வகையில் என் கண்முன் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது..

ஒருமுறை எங்களின் விற்பனை வாகனம் பழுதுபட்டு மன்னை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் [ஊர் பெயர் வேண்டாமே..!] நின்றுவிட்டது. பழுது நீக்குவோர் வர தாமதமானதால் அருகில் உள்ள சிறு கோவிலில் அமர்ந்திருந்தேன். அரிசனங்கள் வாழும் பகுதி அது. இன்னும் மூன்றே நாட்களில் பொங்கலை எதிர்நோக்கி ஊர் ஒரு பரபரப்பைப் பூசிக்கொண்டிருந்தது.

அருகில் இருந்த வீட்டில் உள்ள உரையாடல் என் காதுகளில் வந்து விழுந்தது. ஒரு சிறுவன் தன் பாட்டனாரை கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்ல வேண்டிக்கொண்டிருந்தான். பெரியவருக்கு 65 வயதிருக்கும். கூடியவரை சமாளிக்கப் பார்த்தும் முடியாமல் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.இருவரும் தங்கள் வீட்டு வேலிப் படலை நீக்கி வெளியேறுவதற்கும் ஒரு 18 வயது இளைஞன் மோட்டார் சைக்கிளில் அவர்கள் வீட்டு வழியே சாலையில் செல்வதற்கும் சரியாக இருந்தது.
பெரியவரைப் பார்த்ததும் இளைஞன் அரைவட்டம் அடித்து திரும்பி வந்தான்..

"எலே.. கழிஞ்சான்.. எங்கடா வெள்ளையும் சொள்ளையுமா கெளம்பிட்டே..?"

தன் பாட்டனாரைத்தான் அந்த இளைஞன் இப்படிக் கூப்பிடுகிறான் என்று அறிந்துகொள்ளவே சிறிதுநேரம் பிடித்தது அந்த சிறுவனுக்கு. அதிர்ச்சி விலகாத கண்களுடன் இருவரையும் மாறிமாறிப் பார்த்தான்.

வழிவழி வந்த அடிமைத்தனத்துடன் அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறு பெரியவர் சொன்னார்.." ஹி..ஹி.. வாங்க தம்பி.. பேரப்புள்ள கடைத்தெருவுக்கு கூப்பிட்டுது.. அதான்..." இதைச் சொல்லும்போது அவரின் உயரத்தில் இரண்டடியைக் காணோம்..!

அதானே பார்த்தேன்.. துண்டு எல்லாம் தோள்ல கெடக்கேன்னு...! ஏதோ செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டதுபோல் பதறி தன்னிச்சையாய்க் பெரியவரின் கை துண்டை தோளில் இருந்து எடுத்தது. கண்டும் காணாததுபோல் இளைஞன் கேட்டான்..

யாரு இது பிசுக்கு..?

எம்பேரனுங்க.. !

படிக்கிறானா..?

ஆமாங்க..!

பேரு என்ன ?

பிரகாசுங்க..!

ஹி..ஹி.. ம்ம் பிரகாஸ்.. சட்டென்று நினைவு வந்தவனாக...

ஏண்டா உம்பேரு அய்யாத்துரை தானே..?

பெரியவரைப் பார்த்து இளைஞன் கேட்க, அவர் அடிமைத்தனமாய் தலையாட்டினார். அந்த மேல்சாதி இளைஞன் காட்சிக்குள் பார்வையாளராக இருக்கும் என்னைப் பார்த்து சொன்னான்.. "சீவக்காரண்ணே.. இவனுக சரியான குசும்பு புடிச்ச பயலுக.. பேரெல்லாம் அய்யா, துரைன்னுதான் வச்சுக்குவானுங்க.. நாம அவனுகளைப் பார்த்து அய்யாங்கணுமாம்.. அதான் அப்பா பேர் வச்சாங்க..கழிஞ்சான்னு.. "

இப்போதும் பெரியவர் முகத்தில் அதே அடிமைச் சிரிப்பு. சிறுவனுக்கோ நிகழ்வுகளைச் சீரணிக்க முடியாமல் விழிகள் தெறித்துவிடும் போல இருந்தது.

இளைஞன் வண்டியை ஸ்டார்ட் செய்துகொண்டே சொன்னான்.. சரி..சரி.. வேட்டி சட்டையெல்லாம் அவுத்துப் போட்டுட்டு வா ஒட்டடை அடிக்கணும்.. பெரியவரின் பதிலை எதிர்பாராமல் கிளம்பிவிட்டான்.

சிறுவனுக்கு கடைவீதி போகாதது பெரிய ஏமாற்றமாகப் படவில்லை.. இயந்திரமாக உடையை அவிழ்த்துக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்த்து கேட்டான்..

ஏன் தாத்தா.. பெரியவங்களை மரியாதையா அழைக்கணும்ன்னு எங்க டீச்சர் சொன்னாங்க.. ஆனா அந்த அண்ணன் உங்களை வாடா போடான்னு கூப்பிடறாங்க.. நீங்க ஒண்ணுமே சொல்லலையே...?

என்ன சொல்லுவார் பெரியவர்..? உங்களுக்கு ஏதாவது சொல்லத் தோன்றுகிறதா..?

மேலும் படிக்க....

2 comments:

Anonymous said...

வேதனை அவமானம் வெட்கம் கேவலம்.

Anonymous said...

இன்னும் மனிதர்களை அடிமையாக வைத்திருக்கும் இவர்களை போன்றவர்களை என்னவென்று சொல்வது???