தினகரன் நெம்பர்1 - மோகன்

தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன் என்று ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ஏ.பி.சி.) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் வெளியாகும் அனைத்து பத்திரிகைகளின் விற்பனையை கடுமையான சோதனைகள் மூலம் தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கும் ஏ.பி.சி. அமைப்பின் லேட்டஸ்ட் அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது.

புதிய வடிவில் வெளிவரத் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள் தினகரன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் முதலிடத்தை கைப்பற்றிய முதல் இந்திய நாளிதழ் தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.பி.சி. ஒரு சுயேச்சையான தணிக்கை அமைப்பு. இதன் சான்றிதழ் தவறுகளுக்கு அப்பாற்பட்டது என்பதோடு, உலக அளவில் அங்கீகரிக்கப்படும் பெருமையும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.பி.சி. தனது தணிக்கை அறிக்கையை வெளியிடும். இப்போது வெளியாகி இருப்பது 2006 ஆம் ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத கால கணக்கெடுப்பு மற்றும் சோதனைகள் அடிப்படையிலான தணிக்கை அறிக்கையாகும். இதன்படி அந்த ஆறு மாதங்களில் 16 கோடியே 39 லட்சத்து 19 ஆயிரத்து 656 தினகரன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன.

அதாவது, தினந்தோறும் சராசரியாக 9 லட்சத்து 657 தினகரன் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளன. தினத்தந்தி 8 லட்சத்து 54,499 பிரதிகளும், தினமலர் 5 லட்சத்து 76,946 பிரதிகளும் விற்றுள்ளன. இதன் மூலம், தமிழில் மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆங்கில நாளேடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்கூட தமிழகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் தினகரன்தான்!

தமிழ் அச்சுலகில் உயரிய தொழில்நுட்பம், நேர்த்தியான வடிவமைப்பு, செய்தி ரகம் பிரித்தல், உயிரோட்டமான வண்ணப் படங்கள், கருத்துத் திணிப்பற்ற நேர்மை, எளிய மொழிநடை, கிழமைக்கேற்ப மாறாத விலை ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எமது நோக்கத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த சாதனையை பார்க்கிறோம்.

மிகக் குறுகிய காலத்தில் கிடைத்திருக்கும் இந்த மகத்தான வெற்றி, உங்களைப் போன்ற லட்சோப லட்சம் வாசகர்கள் தினகரன் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடே என்பதை உணர்கிறோம். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் எங்கள் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தினகரன் நாளிதழ் மேலும் சாதனைகள் படைக்க

தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.



என்.ஆர்.எஸ். என்று சொல்லப்படும் வாசகர்கள் எண்ணிக்கை தொடர்பான ஆய்வில் 96 லட்சத்து 39 ஆயிரம் வாசகர்களைப் பெற்று, அகில இந்தியாவிலும் மிக அதிக வாசகர்களைக் கொண்ட 8வது மிகப் பெரிய நாளிதழ் என்ற பெருமையை தினகரன் கடந்த ஆண்டு பெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மே 31ம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

புதிய வடிவில் வெளிவரத் தொடங்கிய மூன்றே மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

-தினகரன்

0 comments: