சிங்கப்பூர் வரலாறு

சிங்கபுரம்

சிங்கப்பூரின் பண்டைக் காலம் பற்றி எழுத்து வடிவப்பதிவுகள் கோர்வையாக இல்லை, அங்கொன்றும் இங்கு கொன்றுமாகச் சிலவைதான் கிடைத்துள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் சிங்கபுரம் என்ற ஒரு நகரைக் குறிப்பிடுகிறது.

இவ்வாட்டாரத்தில் முதல் வரலாற்று ஆவணமாக விளங்கும் நகரகிரேத்தாகமா எனும் ஜாவானிய நூல் 1365-ம் ஆண்டில் எழுதபட்டது. இது தெமாசெக் எனும் குடியேற்றப் பகுதியைப் பற்றி குறிப்பிடுகிறது. சி.எம். டர்ன்புல் என்பார் தமது நூலில் (சிங்கப்பூர் வரலாறு 1819-1975).

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட செஜாரா மலாயு எனும் மலாட் மரபு வரலாற்று நூல் மட்டுமே தெமாசெக் சிங்கப்பூராவின் முழுமையான வரலாற்றைத் தருவதாகத் தெரிகிறது என்கிறார்.

இவ்வரலாற்று நூலின்படி இராஜ ராஜ சோழன் என்னும் இந்திய மன்னர் பதினோராம் நூற்றாண்டில் தமது படையெடுப்புகளில் ஒன்றின் போது தெமாசெக்கில் தங்கியிருந்தாகத் தெரிகிறது. இச்சோழ ராஜனின் மகன், சாங் நீல உத்தமன். ஸ்ரீ விஜய எனும் பேரரசின் மையமாக விளங்கிய பலம்பாங் எனும் நாட்டின் அரசன் ஆனான் என்றும், ஸ்ரீ திரிபுவன எனும் பெயரை அவன் சூட்டிகொண்டான் என்றும் இந்த மரபு வரலாறு தெரிவிக்கிறது. இவ்வட்டாரத்தில் உத்தமன் மேற்கொண்ட பயணங்களின் போது தெமாசெக்கில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிது.

அவரின் ஆட்சியின்போதும், அவரைத் தொடந்த நான்கு அரசர்களின் ஆட்சியின் போது சிங்கப்பூரா செழித்தோங்கியது. அதனால் பொறாமையுற்ற மஜபாகிட் எனும் ஜாவா பேரரசு இத்தீவைச் சூறையாடியது. தப்பியோடிய அரசர் மலாக்காவில் புதிய ஆட்சியை நிறுவினார்.

சற்று ஏறக்குறைய 1390-ம் ஆண்டில் பரமேஸ்வரா என்னும் இளவரசர் பலம்பாங் நாட்டின் சிங்காசனம் ஏறினான். பலம்பாங்கை மீண்டும் பேரரசசாக விளங்கச் செய்யவேண்டும் என்பது அவரின் பேராவல். தன் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்னரே அங்கிருந்து துரத்தப்பட்ட அவர், சிங்கப்பூரில் தன் பரிவாரம் புடை சூழ தங்கினான். ஆனால், மஜபாகிட் பேரரசு அவரை விடவில்லை. சிங்கப்பூரிலிருந்தும் அவரைத் துரத்தியது. பரமேஸ்வரக்கும் பின் சிங்கப்பூர் ஆள் அரவற்ற இடமாக மாறவில்லை.

சிங்கப்பூர் சமயாமிய பேரரசுக்குக் கப்பம் கட்டும் நாடாக விளங்கியது. ஆனால் பரமேஸ்வரா தோற்றுவித்த மலாக்கா அரசு விரைவில் சிங்கப்பூர் வரை தனது அதிகாரத்தை செலுத்தத் தொடங்கியது. இருப்பினும் போர்த்துகீசியர்கள் மலாக்கா நகரை 1511 கைப்பற்றியபோது அவ்வரசின் கடற்படைத் தளபதி லட்சுமணா சிங்கப்பூருக்கு ஓடிவந்தார். சுல்தான் ஜோகூர் லாமாவின் (பழைய ஜோகூர்) தம் புதிய தலை நகரத்தை அமைத்துக் கொண்டதோடு, சிங்கப்பூரில் துறைமுக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

போர்த்துகீசியர்கள் 1587-ம் ஆண்டில் ஜோகூர் லாமாவை அழித்து விட்டனர். ஜோகூர் அரசின் தலைமையகம் .ரியாவ்-லிங்காத் தீவுக் கூட்டத்தில் மீண்டும் அமைப்பட்டது. சுல்தானின் மூத்த அமைச்சரான தெமொகோங்கின் அதிகாரத்தில் சிங்கப்பூர் இருந்தது. கடலை நம்பி வாழ்பவர்களும், சிறிய கூட்டமாகச் சில உள்நாட்டு மக்களும் வாழ்ந்து வந்தனர்.

1819 -ஆம் ஆண்டில் பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக அதிகாரியாக சர் ஸ்டாம் போர்டு ராபிள்ஸ் என்பார் சிங்கப்பூருக்கு வந்தார். ஆறு கடலோடு கலக்கும் இடமாகவும், மீன் பிடி தீவாக இருந்த இத்தீவு கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிழக்காசியாவில் நடுநாயகமாக விளங்கச் சிங்கப்பூர் சிறந்த இடம் என அவர் எண்ணினார். அப்போதைய சிங்கப்பூரின் உரிமையாளராக விளங்கிய ஜோகூர் சுல்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்தளமாகச் சிங்கப்பூரை மாற்றினார் ராபிளஸ். அப்போது சிங்கப்பூர் காடு மண்டிய ஒரு தீவாக இருந்தது. காட்டை அழித்து வணிக நிலையமாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார் ராபிள்ஸ்.

1959-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர் சிங்கப்பூரைத் தம் ஆளுகையின் கீழ் வைத்திருந்தார். 140 ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சிங்கை 1959 இல் தன்னாட்சி உரிமை பெற்ற தனிநாடாகியது.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

முதல் தேர்தல் 1959 -ஆம் நடைப்பெற்றது. அதில் மக்கள் செயல் கட்சி வெற்றிப் பெற்று திரு. லீ குவான் இயூ பிரதமராகி சிங்கப்பூரை வழி நடத்தினார்.

1963 –இல் சிங்கப்பூர் அன்றைய ‘மலாயா’வுடன் இணைந்தது. சிங்கப்பூர், மலாயா இணைந்த நாட்டை ‘மலேசியா’ என அழைத்தார்கள். ஆனால் இவ்விணைப்பு சுமார் ஒன்றரை ஆண்டுகளே நீடித்தது. கருத்து வேற்றுமையாலும்,கொள்கை வேற்றுமையாலும் 9-8-1965 ஆம் நாள் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து ஒரு தனி நாடாகியது.

சிங்கப்பூர் தனிக் குடியரசுயாகியது. அரசியல் தலைவர்களின் முன்னோக்குப் பார்வையால் சிங்கப்பூர் பல்வேறு மாற்றங்களைக் கண்டது. இயற்கைக் கனிவளங்கள் ஒன்றுமில்லா சின்னஞ்சிறு தீவு மக்கள் வளத்தை மட்டுமே நம்பியது. மலாயாவிலிருந்து பிரிந்த பின் பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. சின்னஞ்சிறு தீவான சிங்கப்பூரால் தனித்து ஒரு நாடாக இயங்க முடியுமா என்ற ஐயப்பாடு மக்கள் மனதில் தோன்றின. அந்த ஐயப்பாட்டைக் களைய, சிங்கப்பூர் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை, செயல்பாடுகளை நிறைவேற்றியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், 1971- ஆம் ஆண்டு தூரகிழக்கில் தான் வைத்திருந்த இராணுவத்தை குறைக்கவே சுமார் 10,000 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சிங்கப்பூர் பாதுகாப்பிற்கு தன்னை நம்பவேண்டிய கட்டாய நிலையில், கட்டாய இராணுவ சேவையை ஆரம்பித்தது. மேலும் குடியிருப்பு,சமூகப் பிரச்சனைகளில் நாடு உடனே சமாளிக்க வேண்டியதாயிற்று. இதனால் பொருளாதார துறையில் நன்கு வளர்ச்சிக் கண்டது. இந்த வளர்ச்சி படிப்படியாக வளர்ந்து ஓர் உன்னத நிலையை அடைந்துள்ளது.

1819 ஆம் ஆண்டு முதல் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்த குடியேறிய மக்களின் அரிய உழைப்பால் சிங்கை, சிறுகச் சிறுக மாநகரமாக மாறத் தொடங்கியது. தாம் குடியேறி இடத்தில் தங்களுடைய பண்பாடு, மொழி போன்றவற்றின் பாரம்பரியங்களை பல்வகை மக்களூம் பேணிக் காத்தனர். இதில் தமிழருடைய பங்கு சிறப்புக்குரியது.

சிங்கப்பூரில் தமிழர்

1880 - களிலிருந்து தமிழும், தமிழ் இலக்கியமும் தோன்றி வளரலாயிற்று. நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியைச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் பெற்றுள்ளது. 1993-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர்.
இதில் 77.5 விழுக்காட்டினர் சீனர்; 14.2 விழுக்காட்டினர் மலாய்க்காரர்; 7.1 விழுக்காட்டினர் இந்தியர்கள்; 1.2 விழுக்காட்டினர் பிற இனத்தவர்கள். இந்தியர்களுள் சுமார் 1 1/2 இலட்சம் தமிழர்களும் அடங்குவர்.

தமிழ்ப் பள்ளிகள்

தமிழகத்திலிருந்து வந்து குடியேறிய தமிழர்கள் தமிழின்பால் கொண்ட ஆர்வத்தால் பல தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கத் தொடங்கினர். தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் வளர்ப்பதற்குப் பெரும் முயற்சிகளைச் செய்துள்ளனர். ‘திருவள்ளுவர்’, ‘வாசுகி’’, ‘அரவிந்தர்’, ‘நாகம்மையார்’, ‘சாரதா தேவி’,‘கலைமகள்’, ‘உமறுப் புலவர்’ போன்ற பெயர்களில் இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கினர்.

ஆலயங்கள்

தேடச் சென்ற தமிழர்கள், தங்கள் நாகரீகச் சின்னமாக விளங்கும் திருக்கோயில்களையும் சென்ற இடங்களில் எல்லாம் படைத்தளிக்க மறந்தார்கள் இல்லை. தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தாங்கள் சீரும் சிறப்பாக வாழ்கிறார்களோ இல்லையே, திருக்கோயில்கள் சீரும் சிறப்பும் பெற்று திகழ்ந்தன். இருக்க இடம் உண்ண உணவு இல்லை என்றாலும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பி இன்பம் கண்டான்.

அழியும் உடலுக்குள் இருக்கும் அழியா ஒன்றுக்கு, ஆன்மா என்று கண்டான். அந்த ஆன்மா போகுமிடங்களில் மதிப்பளிக்கப் படவேண்டும் என்று இறைவழி பாட்டைத் துவங்கினர். இந்து சமயம் ஒரு ஆழ்கடல் போன்றது. அதில் சேர்ந்துள்ள மொழிகளும், பண்பாடுகளும் புத்தம் புதிய கருத்துகளைக் கொண்டு சேர்த்தவை. அவற்றை எல்லாம் இயன்ற வரை ஆங்காங்கே புகுத்திய நிலையில் தான் கோயில்கள் தோன்றம் அளிக்கிறது.


நன்றி:- சிங்கை கிருஷ்ணன்

5 comments:

Anonymous said...

நிறைய தகவல்கள். நன்றி சார்.

Anonymous said...

சூப்பர்.

Anonymous said...

Pls correct the no // 2,873,000 மில்லியன் மக்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றனர்.//
Venkat

said...

கட்டுரையாளரின் எண்ணிக்கை அது. உண்மையான நிலவரம் அறிந்து பின் இடுகிறேன் வெங்கட்.

said...

ஜனத்தொகை இப்போது 4 மில்லியனை தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன்.
6.5 மில்லியன் மக்கள் தேவைக்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகிவிட்டது.
என்ன! 6 மாதத்துக்கு சுமார் 14000 குழந்தைகள் தான் பிறக்கிறார்கள்.